* பாகிஸ்தான் மறுப்பு
பாகிஸ்தான் சிறையிலுள்ள தூக்குத் தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் தூக்குத் தண்டனை மேலும் ஒரு மாதத்திற்கு தள்ளிவைக்கப்படவில்லையென பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித்சிங் என்பவர் 1991 ஆம் ஆண்டில் தவறுதலாக பாகிஸ்தானுக்குள் நுழைந்த சமயம் அங்கு நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகினர்.
இதற்கு சரப்ஜித்சிங்கே காரணமென அவர்மீது வழக்குத் தொடரப்பட்டு அவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதனைத் தொடர்ந்து சரப்ஜித்சிங்கால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை உயர்நீதிமன்றமும் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பும் நிராகரித்தனர்.
இந்நிலையில், லாகூர் சிறையிலடைக்கப்பட்ட அவரை ஏப்ரல் முதலாம் திகதி தூக்கிலிட தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், இந்தியாவின் கோரிக்கையைத் தொடர்ந்து இத்தண்டனை இம்மாதம் 30 ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்குமாறு நேற்றுமுன்தினம் வேண்டுகோள் விடுத்தார். அதுபற்றி பாகிஸ்தான், அதிகாரபூர்வமாக எந்தப் பதிலும் அளிக்கவில்லை.
ஆனால், சரப்ஜித்சிங்கின் மரண தண்டனை மேலும் ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது.
இதை பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுத்தது. சரப்ஜித்சிங்கின் மரண தண்டனை, தள்ளி வைக்கப்படவில்லை என்று முஷாரப்பின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி தெரிவித்தார்.
சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க ஜனாதிபதி முஷாரப்புக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக சரப்ஜித்சிங்கின் வக்கீல் ராணா அப்துல்ஹமீது தெரிவித்தார்.
சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்கக்கோரி முஷாரப்பிடம் புதிதாக மனுத்தாக்கல் செய்யப்படும் என்று பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் அன்சார் பர்னி தெரிவித்ததுடன் பொது மன்னிப்பு வழங்காவிட்டாலும், சரப்ஜித்சிங் ஏற்கனவே 18 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த மாதம் பிரணாப் முகர்ஜியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெக்மது குரேஷியும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த சூழ்நிலையில், சரப்ஜித்சிங் மரண தண்டனை விவகாரம், பலத்த நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.