ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அஜ்ஜுதின் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.
தாரிக் அஜ்ஜுதின் கடந்த பெப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகருக்கு கைபர் கணவாய் வழியாக காரில் சென்றுகொண்டிருந்த சமயம் திடீரெனக் காணாமல்போனார்.
இந்நிலையில் அல் அரேபியா தொலைக்காட்சியில் தாரிக் உரையாற்றும் வீடியோ நேற்று ஒளிபரப்பப்பட்டது.
அவ் ஒளிபரப்பில் "நான் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளேன். எனக்கு ரத்தக் கொதிப்பு, இருதய நோய் உள்ளது. சிறையில் இருக்கும் சில தீவிரவாதிகளை விடுதலை செய்யும்படி தீவிரவாதிகள் கேட்கிறார்கள். அவர்களை விடுதலை செய்து என்னைக் காப்பாற்றுங்கள்' என்று தாரிக் பேசினார்.
அவர் கண்ணாடி அணிந்து கழுத்துப் பட்டை இல்லாத சட்டையுடன் பழுப்பு நிறத் தாடியுடன் அமைதியாகக் காணப்பட்டார். அவரை சுற்றி இயந்திரத் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் நின்றார்கள். அந்த வீடியோ படத்தின் பின்னணியில் மலைப்பகுதி உள்ளது.
தாரிக்கை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி இருக்கலாம் என்று கருதப்படுவதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மீட்க பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டுள்ளது.