* பாகிஸ்தான் பிரதமர்
காஷ்மீர் மக்களின் விருப்பம் எதுவோ அதன்படியே காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி தெரிவித்துள்ளார்.
மேலும் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமை கோரிக்கைக்கு தார்மீக, சமூக, அரசியல் ரீதியில் அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் அளிக்கும். தன்னைச் சந்தித்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைவர் ராஜா ஸுல்குர் நைன் கானிடம் கிலானி இவ்வாறு கூறியதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் காஷ்மீர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வுகாண முடியுமென நம்புவதாகவும் கிலானி கூறியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியாவும் ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால், இதற்கு மாறான கருத்தைப் பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரப் தெரிவித்துள்ளார்.
`இரு நாட்டு மக்களின் நலன் கருதியும் இருதரப்புப் பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் காஷ்மீர் பிரச்சினைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணப்பட வேண்டும் என்று முஷாரப் கூறியிருந்தார்.
சீனாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் முஷாரப் அங்கு கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கூறியிருந்தார். பிரதமர் கிலானியின் கருத்து இதற்கு மாறான வகையில் உள்ளது. கிலானியைப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதித் தலைவர் கான் சந்தித்துக் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் அரசின் ஆதரவைக் கோரினார். அப்போது பேசுகையில் காஷ்மீர் மக்களின் சுய நிர்ணய உரிமைக்குக் கிலானி ஆதரவு தெரிவித்தார்.