பாகிஸ்தானில் பழங்குடியினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் நடந்த மோதலில் இருபதுபேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் எல்லையோரப் பகுதியான கைபர் கணவாய் அருகே கூகி கேல் என்ற பழங்குடியின அமைப்பு செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கும் இப்பகுதியில் உள்ள லஷ்கர் இஸ்லாம் என்ற அமைப்புக்கும் இடையே கடந்த 3 நாட்களாகச் சண்டை நடந்து வருகிறது.
இப்பகுதியில் நடைமுறைப்படுத்த வேண்டிய மதச் சடங்குகள் குறித்து தீவிரவாத அமைப்பு பரிந்துரைத்த 30 கோரிக்கைகளை கூகி கேல் அமைப்பு நிராகரித்ததையடுத்து மோதல் தொடங்கியது.
இருதரப்பிலும் எதிர்த்தரப்பினர் மீது பலத்த தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இந்த மோதலில் இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 12 பேர் காயமடைந்தனர்.
பயங்கர ஆயுதங்களும் ரொக்கெட் மற்றும் பீரங்கிக் குண்டுகளும் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டன. வடகிழக்கு மாகணத்தின் தலைநகரான பெஷாவரில், பீரங்கித் தாக்குதல் அதிகமாக இருந்தது.
மேலும் பழங்குடியினர் அமைப்பைச் சேர்ந்த 17 பேரை அப்டிரி தீவிரவாத அமைப்பு கடத்திச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.