வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுவரும் மில்லலான தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கடந்த வியாழக்கிழமை முதல் மேற்படி தோட்டத்தில் தற்காலிக பொலிஸ் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி மாலை மேற்படி தோட்டக் காவலாளியான அனில் பத்மசிறி (வயது 32) என்பவரை தாக்கிய 8 பேர் கொண்ட குழுவினரை மகாவெல பொலிஸார் இதுவரை கைது செய்யாமைக்குக் கண்டனம் தெரிவித்தே மேற்படி தோட்டத்தை சேர்ந்த தொழிலாளர்களும் தோட்ட உத்தியோகத்தர்களுமாக மொத்தம் 250 பேர் கடந்த 15 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இ.தொ.க.மற்றும் ல.நோ.தொ.யூனியன் ஆகிய தொழில் சங்கத்தை சேர்ந்தோரே இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மேற்படி தோட்டம் எல்கடுவ எஸ்டேட் பிளான்டேசன் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மில்லலான தோட்டத்தை ஊடறுத்து செல்லும் ஆற்றில் தோட்டத்துக்கு அண்மையில் வசித்துவரும் கிராம வாசிகள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதை மேற்படி தோட்டக் கவாலாளி எதிர்க்கின்றமையால் இவருக்கும் கிராம வாசிகளுக்மிடையில் அடிக்கடி வாக்குவாதங்களும் சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வந்த நிலையில், கடந்த வியாழன் கிராமவாசிகளைக் கொண்ட குழுவொன்று மேற்படி தோட்டக் காவலாளியின் வீட்டிற்குள் புகுந்து அவரைத் தாக்கிய பின் கத்தியால் வெட்டிவிட்டு தம்பியோடியுள்ளது.
படுகாயங்களுக்குள்ளான காவலாளி தற்போது மாத்தளை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பில் மகாவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரை குற்றவாளிகளில் ஒருவர்தானும் கைது செய்யப்படாத நிலையில், குற்றவாளிகளை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே தொழிலாளர்களும் உத்தியோகத்தர்களும் கூட்டுச் சேர்ந்து இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேசமயம் தலைமறைவாகிய குற்றவாளிகளைத் தேடி கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் மகாவெல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அபயசிங்க தெரிவித்தார்.