-எம்.ஏ.எம். நிலாம்-
அரிசியை தாராளமாக சந்தைப்படுத்துவதை விடுத்து அரசாங்கம் அரிசிக்கு உத்தரவாத விலையை நிர்ணயிப்பது காலம் கடந்து போன கொள்கையாகவே காணப்படுவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின புதிய ஏமாற்று வித்தையானதேஅரிசிக்கான உத்தரவாத விலைப் பிரகடனம் எனவும் ஜே.வி.பி. சுட்டிக்காட்டியுள்ளது.
உத்தரவாத விலைப் பிரகடனத்தின் மூலம் ஒரு போதும் அரிசியின் விலையைக் குறைக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் ஜே.வி.பி. இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;
ஆரம்பத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன எந்தச் சக்தியாலும் அரிசியின் விலை அதிகரிப்பைத் தடுத்து நிறுத்த முடியாதென அடிக்கடி கூறிவந்தார். கடந்த 16 ஆம் திகதி இரவு அவருக்கும் அரசுக்கும் எங்கிருந்து புது ஞானோதயம் பிறந்துள்ளது எனக் கேட்கின்றோம். திடீரென ஒரே இரவுக்குள் அரிசிக்கு உத்தரவாத விலையை வர்த்தமானி மூலம் பிரடகனப்படுத்தப்பட்டது. அதுவும் நான்கு வகையான அரிசிக்கு மட்டுமே இந்த உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உத்தரவாத விலை என்பது ஒரு காலம் கடந்து போன கொள்கையாகும். அது நடைமுறைச் சாத்தியமற்ற ஒரு விடயமாகவே இன்று காணப்படுகின்றது. பொருளியல் விஞ்ஞானத்தில் மிக இலகுவான சித்தாந்தமான கேள்வி- விநியோகம் என்ற நிரலுக்கேற்ப அரசாங்கம் செய்ய வேண்டியது அரிசியை தாராளமாக சந்தைப்படுத்த நடவடிக்கை எடுப்பதே ஆகும்.
சந்தையில் அரிசி தாராளமாகக் கிடைக்கும் போது விலை அதிகரிப்பு ஏற்பட வழி உருவாக மாட்டாது. போட்டிச் சந்தை முறைக்கு அரசும் நுழைய வேண்டும். ஆனால், அதற்கான தகைமை அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நீண்ட காலத் திட்டத்தை வகுத்து அரசாங்கம் செயற்பட்டிருந்தால் இன்று அரிசித்தட்டுப்பாடோ, விலை அதிகரிப்போ ஏற்பட்டிருக்க முடியாது.
உலக நாடுகளில் உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழ் நிலையில் அரசு வெளி நாடுகளை நம்பியிருக்காமல் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து நாட்டில் விளையும் நெல்லை முழுமையாகக் கொள்வனவு செய்து கூடுதலான அரிசியை கையிருப்பில் வைத்திருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதே உரிய மார்க்கமாகும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றோம்.
அரசாங்கம் சிறுபிள்ளைத்தனமான முடிவுகளை எடுக்காமல் காலத்துக்கேற்ற விதத்தில் புதிய உத்திகளைக் கையாள வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கின்றோம்.