* கிண்ணியாவில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முஸ்லிம்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். அந்த வகையில் இது முஸ்லிம்களுக்கு ஜனாதிபதித் தேர்தல் போன்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு பொதுத் தேர்தல் போன்றது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தான் வெறும் மாகாணசபைத் தேர்தல் என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிண்ணியா பொதுநூலக மண்டபத்தில் (நேற்று) சனிக்கிழமை இடம் பெற்ற விசேட கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் கூறினார். டாக்டர் எம்.எம்.ஹில்மி தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் திருகோணமலை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளரான ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் கருதியே பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜிநாமாச் செய்து விட்டு இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். இதனால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் நாளுக்கு நாள் எமது அணியில் இணைந்து வருகிறார்கள்.
நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளதால் அதிலுள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது தவறானது.
நான் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமாச் செய்துள்ளதால் அந்த இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள சகோதரர் நௌசாத் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர். இந்த விடயம் முன்கூட்டியே தெரிந்தும் நான் இராஜிநாமாச் செய்துள்ளேன் என்றால் எமக்குள் அவ்வாறான எண்ணம் இல்லை என்பதைக் தெரிந்து கொள்ளலாம்.
நாங்கள் ஏன் இம்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். ஏன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்றோம் என்பதை விளக்குவதற்காக இரு வெளியீடுகள் செய்துள்ளோம். அவற்றை வாசித்து முழுமையான விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.