* தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அஸ்வர்
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தோல்வியடைந்ததும் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் திட்டமிட்டிருப்பதாக ஜனாதிபதி ஆலோசகரான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
மேலும், இத்தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காக உருவாக்கிய கட்சியின் சின்னத்தை தலைவர் தாரை வார்த்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து புல்மோட்டை, குச்சவெளிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அஸ்வர் மேலும் உரையாற்றுகையில்;
சர்வதேச வல்லரசுகள் விரித்துள்ள சதிவலையில் முஸ்லிம்களையும் சிக்கவைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் துணைபோயிருக்கின்றார். ஐ.தே.க.வுடன் அவர் கூட்டுச் சேர்ந்ததன் உண்மையான நோக்கமும் இதுவே. இந்த சதிவலைக்குள் முஸ்லிம்கள் குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அகப்பட்டுவிடக்கூடாது என்பதுதான் எனது வேண்டுகோள்.
உமா ஓயா, ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றுக்கு வழங்கும் நன்கொடைகளுக்குப் புறம்பாக, மேலும் 2000 மில்லியன் டொலர்களை வீடமைப்புக்காகத் தருவதாகவும் ஈரான் உறுதியளித்துள்ளது. இதனை கிழக்கு மாகாண வீடமைப்புக்கே செலவிடப்போவதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது எம்மைப் பூரிப்படையச் செய்கிறது. இது சர்வதேச இஸ்லாமிய உலகம் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நல்லாட்சிக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்தையே குறிக்கிறது.
இதேபோன்று சவுதி அரசின் உதவியோடு கிண்ணியா மக்களின் மிக நீண்டகால அவலம் நீக்கப்படவுள்ளது. கிண்ணியாப் பாலம் கட்டி முடிக்கப்பட்டதும் மக்கள் நேராகவே கிண்ணியாவுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் பயணிக்க முடியும். இதனை பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான என்.ஏ.அப்துல் மஜீத் மேற்பார்வை செய்துவருகின்றார். அத்துடன், இறக்கண்டி, புல்மோட்டை, புடவைக்கட்டு, குச்சவெளி போன்ற இடங்களிலும் பாலங்கள் கட்டும் பணிகள் மிகத் துரிதமாக இடம்பெற்றுவருகின்றன என்றும் அஸ்வர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் ஏ.மஜீத், வேட்பாளர்களான மௌலவி எஸ்.எல்.எம்.ஹஸன் (அல் அஸ்ஹரி), ஆரியவதி கலப்பதி, டாக்டர் திடீர் தௌபீக், டாக்டர் ஏ.எம்.லாபீர், கே.எம்.முஜீப், இலங்கை கனிப்பொருள் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாபிர் நஸார், மாப்பிள்ளை ஆப்தீன் உட்பட பலரும் உரை நிகழ்த்தினர்.