* திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் மாஹிர் தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் தாயக பூமியை சுவர்ண பூமி என்ற போர்வையில் திட்டமிட்டு சூறையாடும் பேரினவாதிகளின் செயற்பாடு பூண்டோடு அழிக்கப்பட வேண்டுமேயானால் இப் பிரதேசத்திலுள்ள அனைத்து சிறுபான்மையினரும் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுக்கு சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும்.
இவ்வாறு சம்மாந்துறையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றிய சம்மாந்துறைத் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ஐ.எல்.எம். மாஹிர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு மக்களுக்கு சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், எந்தவிதமான பீதியும் இன்றி நடமாடவும் வழி அமைத்துக் கொடுத்துள்ளோம் என்று மார்தட்டிப் பேசுபவர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை மாலை 6 மணியுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்று தடைபோட்டதன் மர்மம் என்ன?
கிழக்கு மாகாணத்தில் அதிகமாக வாழும் மக்கள் விவசாயத்தையே தமது பிரதானமான தொழிலாகக் கொண்டவர்கள் தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலும் சிறுபோக நெற் செய்கைக்காக உழவு வேலைகளிலும், விதைப்பு வேலைகளிலும் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விவசாயிகள் வயல் நிலங்களில் இருந்து மாலை 6 மணிக்குப் பின்பு தான் வீடு திரும்புவார்கள். எமது பிரசாரக் கூட்டங்களுக்கு வழமையாக இரவில் தான் அதிகமான மக்கள் கூடுவது வழக்கம். இப்படியான சூழ்நிலையில் இதனை தடுத்து மக்களுக்கு எமது தேர்தல் பிரசாரம் செல்லக்கூடாது என்பதற்காக அரசாங்கம் செய்துள்ள திட்டமிட்ட சதி இதுவாகும். ஆனால், இவற்றையெல்லாம் மக்கள் அறியாமல் இல்லை.
வடக்கும் கிழக்கும் இணைந்திருந்த போது கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் யுத்த சூழ்நிலை மிகவும் உக்கிரமடைந்திருந்த வேளையிலும் கூட முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவிதமான வீதித் தடைகளும் ஏற்படுத்தப்படாமல் மக்கள் சுதந்திரமாக திரிந்தார்கள். ஆனால், தற்போது திடீர் திடீரென முஸ்லிம் பிரதேசங்களில் வீதிச் சோதனைச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு அப்பாவிப் பொது மக்கள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றார்கள். இதனால், இப்பிரதேசத்திலுள்ள மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றார்கள்.
மத்திய அரசாங்கத்தினால் மாகாண சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தும் பூரணமாக கொடுக்கப்படுவதுடன், மாகாண சபையை சுதந்திரமாக செயற்படக்கூடியதாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் திட்டமாகும்.
அண்மையில் கல்முனைப் பிரதேசத்தில் அரசின் பாதுகாப்பில் செயற்படும் ஆயுதக் குழுவொன்று மீனவர்களைத் தாக்கி அதனால் ஏற்பட்ட பிரச்சினை போன்றதொரு சம்பவம் மீண்டும் இத் தேர்தல் காலத்தில் நடைபெறாது என்பதற்கு அரசாங்கம் என்ன உத்தரவாதத்தை வழங்கப்போகின்றது.
கிழக்கு மாகாணத்திலுள்ள சிறுபான்மை இனங்களான தமிழர்களும், முஸ்லிம்களும் தமது கலாசார ஊழியர்களை பேணி ஒற்றுமையாகவும், சமாதானமாகவும் வாழும் நிலையொன்றை இத் தேர்தல் மூலம் இப்பிரதேசத்தில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.