ஈரான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் கிழக்கில் வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கென 1.5 மில்லியன் டொலர் நிதி உதவியினை ஈரானிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈரான் நாட்டுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதியால் இந்நிதி அன்பளிப்புச் செய்யப்பட்டது.
வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரபினது ஆலோசனைக்கேற்ப வீடமைப்பு பொது வசதிகள் அமைச்சின் வழிகாட்டலுடன் இந்த வீடமைப்பு அபிவிருத்தித் திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும்.
திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் யுத்தத்தாலும் கடல்கோளினாலும் வீடுகளை இழந்த மக்களின் நலனை கவனத்தில்கொண்டு இந்த வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் கீழ் புது வீடுகளை நிர்மாணித்தல், தற்போது காணப்படுகின்ற வீடுகளை மேலும் திருத்தியமைத்த என்பவற்றுக்கான உதவிகளை பெறவுள்ள குடும்பங்களைத் தெரிவு செய்வதற்கான ஏற்பாடுகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்டுள்ளது.
`நெகெனஹிர' நவோதய அபிவிருத்தித் திட்டத்திற்கு சமாந்தரமாக இந்த ஈரானிய நிதி உதவியுடனான வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அடுத்த ஒரு சில வாரங்களுக்குள் குறித்த திட்டம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.