கல்முனைப் பிராந்தியத்தில் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் நோக்கில் படகு இறங்கு துறைகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது நிந்தவூர் ஆகிய இடங்களிலேயே இப்படகு இறங்கு துறைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. உயர் கல்விப் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா எடுத்துக் கொண்ட முயற்சியின் பயனாகவே இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கல்முனைப் பிராந்திய மீனவர்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற இப்படகு இறங்கு துறைகளை அமைப்பதற்கு இபாட் நிறுவனம் முன்வந்துள்ளது. இதற்கான ஆய்வு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மீனவர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் ஒன்று அமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில் கல்முனை சாஹிராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இபாட் திட்ட முகாமையாளர் கே.முத்துமாள, உதவி முகாமையாளர் எம்.அஸ்ரப், கடற்றொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் செல்வராசா, சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஐ.தௌபீக் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.