யாழ்ப்பாணம் குருநகரில் அமைந்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக ஐ.நா. அபிவிருத்தித்திட்டத்தின் நிதியுதவியுடன் 12.6 மில்லியன் ரூபா செலவில் நவீன வலைபின்னும் இயந்திரம் ஒன்று கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வியந்திரம் தாய்லாந்தில் இருந்து எடுத்து வரப்படவுள்ளது.
தாய்லாந்து பொறியியலாளர்கள் வடகடல்நிறுவன பணியாளர்களுக்கு பயிற்சிவழங்க விரும்பாமையால் இயந்திரம் கொழும்பில் பொருத்தப்பட்டு பணியாளர்களுக்கு அங்கேயே பயிற்சியளிக்கப்பட்ட பின்னர் யாழ்ப்பாணம் எடுத்துவரப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகரில் முன்னர் சீநோர் வலைத்தொழிற்சாலையாக இயங்கிய காலத்தில் பயன்பாட்டில் இருந்த இயந்திரங்களில் ஆறு இயந்திரங்கள் குறைந்த உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருவதால் கேள்விகளை நிறைவேற்றுவது நிறுவனத்துக்கு கஷ்டமாகவுள்ளது.
தற்போது இந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மறுசீரமைக்கப்பட்டு சபையின் தலைவராக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷும் புதிய இயக்குநர் சபை உறுப்பினர்களாக யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.நவரெட்ணம், யாழ்.மாவட்ட நீரியல்வள கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் தங்கராஜா ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிறுவனத்தில் மறுசீரமைக்கப்பட்டு இயங்கிய பின்னர் பிளாஸ்டிக் படகுகள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தபோதும், மூலப்பொருட்களை எடுத்துவருவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் படகு உற்பத்தி பதினைந்து மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில், பாதுகாப்புக் காரணங்களுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு மட்டுப்படுத்தப்படுவதால், சிறிய கண்ணுடைய வலைகளே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி செய்யப்படும் வலைகளில் எண்பது சதவிகிதமானவற்றை கடல்கோள் அனர்த்தங்களினால் வாழ்வாதாரங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு வழங்க உலக தரிசன இயக்கம் ஐ.நா. அபிவிருத்தி திட்டப்பிரிவு ஆகியவை கொள்முதல் செய்து வருகின்றன.
இவ்வலைகள் வேலணை, சின்னமடு, நாவலி, உயரப்புலம், கொக்குவில் கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனங்கள் ஐந்து மில்லியன் ரூபா மீன்பிடிவலைகளை கொள்முதல் செய்ய கேள்விகளை சமர்ப்பித்துள்ளன.