திருகோணமலை சம்பூரில் ஐநூறு மெகாவாற் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் தேசிய அனல் மின் நிலையத்தை நிர்மாணிக்கும் உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு செப்ரெம்பரில் மேற்படி பகுதியை இராணுவம் கைப்பற்றியதையடுத்து டிசம்பரில் இது தொடர்பான உடன்படிக்கை ஒன்றை இரு நாடுகளும் ஏற்படுத்தியிருந்தன.
ஆனால், அக்காலப் பகுதியில் சம்பூரில் காணப்பட்ட மோதல் நிலை காரணமாகவும் இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதாலும் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணிகளில் ஸ்தம்பித நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசினால் நியமிக்கப்பட்ட குழுவும் இந்திய அரசின் அதிகாரிகளும் புது டில்லியில் இவ் உடன்படிக்கையில் ஏகமனதாக கைச்சாத்திட்டுள்ளனர்.
திருகோணமலைத் துறைமுகத்திற்கு அருகில், இந்திய எண்ணெய் கூட்டுத் தானபத்திற்கு அருகிலுள்ள பிரதேசத்திலேயே இதனை நிறுவுவதற்குரிய இடத்தை அரசாங்கம் தெரிவு செய்திருந்தது.
ஆனால், சம்பூரில் இவ் அனல் மின்னிலையத்தை நிறுவுவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசிற்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததுடன் அனல் மின் நிலையத்தின் மூலம் சூழல் மற்றும் அரசியல் ஆபத்துகள் ஏற்படுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இவ் அனல் மின்னிலையத்தை நிர்மாணிக்கும் உடன் படிக்கை புதுடில்லியில் கைச்சாத்திடப்பட்டிருப்பதுடன் இவ் அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் நாட்டிற்குத் தேவையான மின்சாரத்தின் 20 வீதமானவை நிறைவேற்றப்படும்.
இத்திட்டத்திற்குத் தேவையான 500 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை தேசிய அனல் மின் உற்பத்தி நிலையமும் இலங்கை மின்சார சபையும் தலா 50 வீதமாக ஈடு செய்யவுள்ளது.
இந்நடவடிக்கையானவை இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார நட்புறவை மேலும் வலுவுடையதாக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ராமேஸ்வரம், தலைமன்னார் இடையேயான கடலடி மின்சார இணைப்பு தொடர்பாக இன்னும் மூன்றரை வருடங்களில் முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக சுவீடன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் 2,293 கோடி ரூபா செலவீனம் ஏற்படுமென கணக்கிட்டுள்ளது.