இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளை முடக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமானப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பு செயலகம் விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக செயல்பட்டு வருவதாக அரசாங்கம் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனிதாபிமான பணிகளை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பானது இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற செயல்பாடுகள் குறித்து சமூகத்திற்கு அறிக்கைகளை வழங்கி வருகின்றது.
இந்த அமைப்பின் சுயாதீன அறிக்கைகளே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சமூக நெருக்கடிகளை ஏற்படுத்தக் காரணமாக அமைந்துள்ளன.
இதனை அடுத்து ஐ.நா.வின் செயல்பாடுகள் பக்கச்சார்பானவை என்றும் அவர்கள் விடுதலைப் புலிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் இலங்கை அரசாங்கம் தனது இணையத்தளங்கள் மூலமாக பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளை மோசமாகப் பாதிக்கும் என்பதோடு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான பணிகளை இடைநிறுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லக்கூடுமென்று பெயர் குறிப்பிட விரும்பாத ஐ.நா.வின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.