* ரவூப் ஹக்கீம் கூறுகிறார்
கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை தமிழ்பேசும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலாகக் கணிப்பதாக ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தலைமை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சிப் பட்டியலில் போட்டியிடுபவருமான ரவூப் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திருமலை செய்தியாளர்களுடனான சந்திப்பில் கூறினார்.
"ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு இத்தேர்தல் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலாக இருக்கலாம். தமிழ் பேசும் மக்கள் இத்தேர்தலை ஆட்சிமாற்றத்துக்கு வழி சமைக்கப்போகும் ஒன்றாகக் கருதுகிறார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னோடியானதாகக் கருதுகின்றார்கள்"
சகல இனங்களைச் சேர்ந்த மக்களின் சுமூக வாழ்வை உறுதிப்படுத்துமுகமாக அச்சுறுத்தல், அடாவடித்தனம் மற்றும் தேர்தல் மோசடிகளுக்கு முகம் கொடுத்து, நாம் இந்தத் தேர்தலில் கலந்துகொள்கின்றோம்.
`கிழக்கின் உதயம்' என்ற போர்வையில் அரசாங்கம் போலி நாடகம் ஒன்றை ஆடிக்கொண்டிருக்கிறது. பாரிய அபிவிருத்தி என்ற போலிப் பிரசாரத்தையும் அரசு மேற்கொண்டு வருகிறது. பல நாடுகள், வெளிநாட்டு நிறுவனங்கள் யுத்தம் கடற்கோள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கு வழங்கிய நிதி உதவியை `கிழக்கு உதயம்' என்ற போலிநாடகத்துக்கு அரசு பயன்படுத்தி வருகின்றது. இந்தக் கூத்து தற்போது தெளிவாகியுள்ளது.
மகிந்த சிந்தனையின் கீழான கிழக்கு உதயம் என்ற போலி நாடகத்துக்கு மக்கள் மயங்கி விடமாட்டார்கள். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வன்முறை, மோசடியை பாவிப்பதற்கு அரசு தயாராகி வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. இதற்கு நாம் அஞ்சமாட்டோம்; எமது நடவடிக்கைகளை முடக்கவும் அனுமதிக்கமாட்டோம்.
மக்களுடைய ஆதரவை முதலீடாகக் கொண்டே நாம் போட்டியிடுகின்றோம். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதை அறிந்ததும் ஆளும் கட்சி கலக்கம் அடைந்தது. நாம் தெளிவாகவே இருக்கின்றோம். அரசாங்கத்தின் பதவிக் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் நாம் திடசித்தம் கொண்டுள்ளோம்.
தேர்தலில் தோல்வியடையப் போகிறோம் என்ற பீதியில் ஆளும் தரப்பினர் ஐ.தே.க., மு.கா.கூட்டு குறித்து அப்பட்டமான அபாண்டமான கூற்றுக்களை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் வாக்களிக்காத காரணத்தினால் தான் இன்றைய ஜனாதிபதி பதவிக்கு வந்தார்.
கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்கள் ஆட்சி அமைக்கும் பிரதேசம், சகல தமிழ் மக்களையும் தற்போதைய அராஜக சூழலிலிருந்து விடுவிக்கும் ஒரு போராட்டமாகவே இத்தேர்தலை நாம் சந்திக்கின்றோம்.