இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் உதவிப் பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் சாரதி மற்றும் பெண் பொலிஸ் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மேற்படி, பதவிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதவிக்கு க.பொ.த. சா/த பரீட்சையில் கணிதம், தாய்மொழி உட்பட ஒரே தடவையில் 6 பாடங்களிலும் க.பொ.த. உ/த பரீட்சையில் ஒரே தடவையில் 3 பாடங்களிலும் சித்தியெய்திய 5 அடி 6 அங்குல உயரமுள்ள 32 அங்குல மார்பளவு கொண்ட 18-28 வயதிற்கு இடைப்பட்ட இலங்கை பிரஜைகள் ஆண்- பெண் இருபாலாரும் உதவிப் பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த. சா/த பரீட்சையில் தாய்மொழி கணிதம் உட்பட 6 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியெய்திய 5 அடி 4 அங்குல உயரம் கொண்ட ஆண்கள் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கும் க.பொ.த. சா/த பரீட்சையில் 6 பாடங்கள் ஒரே அமர்வில் தாய்மொழி, கணிதம் உட்பட 5 அடி 2 அங்குல உயரம் கொண்ட 18- 28 வயதிற்கிடைப்பட்ட பெண்கள் பெண் பொலிஸ் பதவிக்கும் விண்ணப்பிக்க முடியும்.
க.பொ.த. சா/த பரீட்சையில் கணிதம், தாய்மொழி உட்பட இரு அமர்விற்கு மேற்படி முறையில் 5 பாடங்கள் சித்தியடைந்துள்ள இலகு வாகனங்கள் அல்லது கனரக வாகனங்கள் ஓட்டக்கூடிய ஒரு வருட அனுபவ சான்றிதழ் பெற்ற அல்லது அனுபவமுள்ளவர்கள் பொலிஸ் சாரதி பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் எனவும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படி, பொலிஸ் கான்ஸ்டபிள் ஆண், பெண் மற்றும் பொலிஸ் சாரதிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள், ஊவா மாகாணம் பதுளை, பண்டாரவளை, மஹியங்கனை பொலிஸ் நிலையங்களில் 18 ஆம் திகதியும், சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி, பலாங்கொடை, எம்பிலிப்பிட்டிய பகுதிகளில் 25 ஆம் திகதியும், கேகாலை, அவிசாவளை, வரகாபொல பொலிஸ் நிலையங்களில் அடுத்த மாதம் 30 ஆம் திகதியும் மத்திய மாகாணம் கண்டி, மாத்தளை, கம்பளை ஆகிய இடங்களில் மே 2 ஆம் திகதியும் நுவரெலியா, ஹற்றன், வலப்பனை பகுதிகளில் மே 23 ஆம் திகதியும் மேல் மாகாணத்தில் மே 16 ஆம் திகதியும் கம்பஹா, நிட்டம்புவ, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் யூன் 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.
களுத்துறை, பாணந்துறை, மத்துகம, ஹொரண, அளுத்கமை மற்றும் வடமத்திய மாகாணத்தில் பொலன்னறுவை, ஹிங்குராகொட, ஹபறன, அறனங்வில ஆகிய இடங்களில் மே 9 ஆம் திகதியும் குருநாகல், நிகவரடிய, குளியாப்பிட்டியிலும் வடகிழக்கு மாகாணம், ஹலாவத, புத்தளம், வென்னப்புவ இடங்களில் ஜூன் 27 ஆம் திகதியும் வடமத்திய மாகாணம் அநுராதபுரம், மதவாச்சி, கெக்கிராவ ஆகிய இடங்களில் ஜூலை 11 ஆம் திகதியும் கிழக்கு மாகாணம் அம்பாறை, மஹஓய, தெய்யத்தகண்டி, ஆகிய இடங்களில் ஜூன் 6 ஆம் திகதியும் திருகோணமலை, கந்தளாய், ஹபரண ஆகிய இடங்களில் ஜூலை 4 ஆம் திகதியும் காலை எட்டு மணி முதல் அந்தந்த பொலிஸ் நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தையும் பாதுகாப்பையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் இப்பதவிகள் வழங்கப்படவுள்ள அதேநேரம், பெரும்பாலான தமிழ்மொழி பேசுபவர்கள் இப்பதவிகளில் இணைத்துக்கொள்ளவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.