* அமைச்சர் அருள்சாமி தெரிவிப்பு
மலையக இந்து ஆலயங்களின் பரிபாலன சபைகளின் ஊடாக இந்து சமய அறிவினையும் சைவ சமயத்தின் தத்துவங்களையும் வளர்த்தெடுக்க மத்திய மாகாண சபையின் இந்து சமய கலாசார அமைச்சர் எஸ்.அருள்சாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
மஸ்கெலியா சென்.ஜோசப் தமிழ் மகாவித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று முன்தினம் 9 ஆம் திகதி காலை 11 மணிக்கு நடைபெற்ற மஸ்கெலியா, சாமிமலை இந்து மத கோவில்களின் பரிபாலன சபைகளின் ஒன்றியத்தின் அங்குரார்ப்பண விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேற்படி ஒன்றியத்தின் அங்குரார்ப்பண விழா ஏற்பட்டினை மஸ்கெலியா இந்துமா மன்ற செயலாளர் ஏ.ஆர்.சீ.திருக்கோண பெருமாள் ஏற்பாடு செய்திருந்தார். இவ்வைபவத்திற்கு மஸ்கெலியா சாமிமலை பிரதேச ஆலய சபைகளைச் சேர்ந்த 100 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் அருள்சாமி தொடர்ந்து கூறியதாவது;
இந்துசமயம் ஆதியும், அந்தமும் இல்லாத ஒன்று என்பதை உணர்ந்துதோட்டப் பகுதி இந்து மக்கள் அந்த சமயத்தை தொடர்ந்தும் பேணி வளர்த்து வருவது பாராட்டத்தக்கதாகும்.
கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்ற கோட்பாட்டின் கீழ் தோட்ட தொழிலாளர்கள் இந்து ஆலயங்களை தோட்டங்கள் தோறும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தோட்டப்பகுதி இந்து ஆலய அறங்காவல் சபையினர்களை முதன் முதலாக ஒன்றினைத்து அதன் முதற் கூட்டத்தை மத்திய மாகாணத்தில் மஸ்கெலியாவில் நடத்திய பெருமை மஸ்கெலியா இந்து மா மன்றத்தையே சாரும். இவ்வாறான ஒரு அமைப்பை எவ்வாறு நடத்தலாம் என்று நான் நினைத்த வேளையில் மஸ்கெலியா இந்து மாமன்ற செயலாளர் ஏ.ஆர்.சீ.திருக்கோண பெருமாள் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை ஒரு முன்னோடியான செயற்பாடாகும்.
தோட்ட இந்து கோவில்களில் தேவாரம், திருவாசகம் போன்றவை முறையாக பின்பற்றப்படுவதில்லை என்றும் அதிகமான கோவில்களில் முறையாக பூஜைகள் கூட நடைபெறுவதில்லை என்றும் புகார்கள் எமக்கு கிடைத்துள்ளன. அவற்றை களைந்தெறிய நான் இந்து கலாசார அமைச்சர் என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்க உள்ளேன். சகல தோட்ட இந்து ஆலய பரிபாலன சபையினர்களுக்கு சமய கருத்தரங்கு கைநூல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளேன்.
தோட்ட ஆலயங்களையும் அறநெறி பாடசாலைகளையும், எனது மத்திய மாகாண சபை அமைச்சிலும், மத்திய அரசாங்க இந்து கலாசார அலுவல்கள் திணைகளத்திலும் பதிவு செய்து அம்மக்கள் பல நன்மைகளை பெற ஏற்பாடு செய்வேன் என்றார்.