ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா குதிரை பந்தய திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் காரோட்டப் போட்டியில் மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு காரோட்ட வீரர் மரணமானதுடன் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலை அவசர பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இலங்கை மோட்டார் சைக்கிள் கழகம், நுவரெலியா மோட்டார் ரேஸிஸ் கழகம் மற்றும் நுவரெலியா மாநகர சபை என்பன இணைந்து 12 மோட்டார் சைக்கிள் போட்டிகளையும் 4 காரோட்டப் போட்டிகளையும் இக்குதிரைப் பந்தயத் திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் 9 ஆவது போட்டியின்போது கண்டியைச் சேர்ந்த டில்சான் பண்டாரநாயக்க (வயது 37) என்ற காரோட்ட வீரர் 26 ஆம் இலக்கம் கொண்ட ஒஸ்டின் 1000 ஞிஞி ரக காரை செலுத்திய பொழுதே விபத்துக்குள்ளாகி மரணமானார்.
விபத்துக்குள்ளான மூன்று காரோட்ட வீரர்களையும் நுவரெலியா பொது வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் மூலம் கொண்டு சென்ற போதிலும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் ஒருவர் மரணமானார். ஏனைய இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு வீரர் மரணமான செய்தியை அறிந்த போட்டி அமைப்பாளர்கள் போட்டிகளை இடையே நிறுத்தியதைத் தொடர்ந்து போட்டிகளை கண்டு கழிக்க வருகை தந்திருந்த பெருந்திரளான பொதுமக்களும் கவலையுடன் வீடு திரும்பினர்.
கடந்த 2007 ஏப்ரலில் நடத்தப்பட்ட இப்போட்டியின் போது மோட்டார் சைக்கிள் வீரர் ஒருவர் பலியானமையும் குறிப்பிடத்தக்கது.