மத்திய மாகாணத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதியாக இராணுவத் தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத்தில் குறிப்பாக மத்திய மாகாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருமளவில் அதிகரித்திருப்பதையடுத்தே, முதல் தடவையாக மத்திய மாகாணத்தில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான கட்டளைத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய மாகாணத்தில் அண்மைக் காலத்தில் விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பெருமளவில் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்தே பாதுகாப்பு அமைச்சு அவசர அவசரமாக இந்த நியமனத்தை செய்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே அனைத்து வித அதிகாரங்களுடன் மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோ உடனடியாக நியமிக்கப்படுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மத்திய மாகாணத்தில் சகல இராணுவ, கடற்படை, விமானப்படை, விஷேட அதிரடிப்படை, ஊர்காவல் படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் நிலையங்கள், குடிசார் பாதுகாப்பு அமைப்புகள், சகல புலனாய்வுப் பிரிவுகள் என அனைத்தும் உடனடியாக மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோவின் கீழ் வரும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நியமனத்தையடுத்து மத்திய மாகாணம் பாதுகாப்பு அச்சுறுத்தலுள்ள பிராந்தியமாகக் கருதப்படுவதுடன், அங்கு மேற்கொள்ளப்படவுள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் ஜெனரல் லோறன்ஸ் பெர்னாண்டோவின் உத்தரவுக்கமையவே நடைபெறும்.
இந்தப் புதிய நியமனத்தையடுத்து மத்திய மாகாணத்தில் புதிய படை முகாம்கள், வீதிச் சோதனை நிலையங்கள் அமைக்கப்படுவதுடன், பாரிய சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல்களும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அங்கு மேலதிக படையணிகளும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.