இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து மயிரிழையில் தப்பி 8 மணி நேர உயிர்ப் போராட்டத்தின் பின்னர் ஆறு அகதிகள் வேதாளை கடற்கரையை வந்தடைந்துள்ளனர்.
இது தொடர்பாக அகதிகள் கூறுகையில்;
"இலங்கை கடற்படையின் கெடுபிடியால் கடலில் தொழில் செய்ய முடியவில்லை. அங்கு அரிசி 100 ரூபாவாகவும் தேங்காய் ஒன்று 65 ரூபாவாகவும் விற்கப்படுகிறது. இவ்வாறான நிலையில் எம்மால் அங்கு வாழ முடியவில்லை.
இதனால், தமிழகத்தை நோக்கி அகதிகளாக புறப்பட்டோம். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் எங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். படகின் இருபுறமும் குண்டுகள் வந்து விழுந்தன. எமது படகோட்டிகள் படகை வேகமாக வேறு திசையில் செலுத்தினர்.
ஆனால், கடற்படையினர் எம்மை விரட்டி வந்து தாக்கினர். எனினும் நாம் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
கடற்படையினர் சென்ற பின் நடுக்கடலில் 8 மணி நேரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தோம். எனினும் ஒருவாறு சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் வேதாளை கடற்கரையில் வந்திறங்கினோம்" என்றனர்.
இவர்களிடம் கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தினர்.