கல்முனைப் பாண்டிருப்புப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கணவன் - மனைவியான இரு கிராம சேவகர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பாண்டிருப்பு காளிகோயில் வீதியிலுள்ள இவர்களது வீட்டிற்கு நேற்று மாலை 4 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஆயுதபாணிகளே இவ்விருவரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இவர்கள் வீட்டிலிருந்த போது உள்ளே நுழைந்த ஆயுத பாணிகள் கண்டபடி துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கணவனான கந்தையா நாகராசா (47 வயது - சேனைக்குடியிருப்பு கிராமசேவகர்) அவரது மனைவியான ஆனந்தி (37 வயது- கல்முனை தமிழ்ப் பிரிவு குருந்தையடி கிராம சேவகர்) ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். இருவரது சடலங்களும் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.
இது தொடர்பான விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.