இலங்கைக்கான ஆயுத விற்பனையை இஸ்ரேல் நிறுத்தப்போவதாக இலங்கைக்கு தெரிவித்துள்ளதுடன் இலங்கைக்கு ஏற்கனவே விற்பனை செய்த தமது ஆயுதங்கள் தொடர்பான தொழில்நுட்பம் ஈரானின் கைகளுக்குச் சென்றுவிடலாமென்றும் இஸ்ரேல் அச்சம் கொண்டுள்ளது.
ஈரானுடன் இலங்கை அரசு மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதையடுத்தே இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த மாத பிற்பகுதியில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடமே இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தலைமையிலான இலங்கைக்குழு இஸ்ரேலிடம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமக்குத் தேவையான ஆயுதங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது.ஆனால், தங்கள் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக்கின் ஊடாக இஸ்ரேல் அரசு தனது முடிவை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவிடம் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் இலங்கை அண்மைக் காலமாக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதன் காரணமாகவே இலங்கைக்கான ஆயுத விற்பனையை தாம் நிறுத்தப்போவதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எகுட் பராக் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இஸ்ரேலைச் சேர்ந்த ஆயுத முகவர் ஒருவரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க ஈடுபட்டிருந்த போதிலும் இஸ்ரேல் உயர் அதிகாரிகளின் தலையீட்டினால் அது தவிர்க்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அண்மையில் ஈரானுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விஜயம் செய்ததும் ஈரானிய ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாத பிற்பகுதியில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தனது இஸ்ரேலிய பயணத்தின் போது போர் விமான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் இஸ்ரேலிய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் பலவற்றுடன் தொடர்புகொண்டு ஆயுத உதவிகளைப் பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அந்த நிறுவனங்கள் அனைத்தும் பிரதமருடன் தொடர்புகொள்ள மறுத்துவிட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இலங்கைக்கான பெருமளவு ஆயுத ஏற்றுமதிகள் மற்றும் முப்படையினருக்குமான போர்த் தளபாடங்களுக்குரிய உதிரிப்பாகங்கள் அனைத்தும் இலங்கைக்கு அனுப்பப்படுவதை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.