வன்னியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை நண்பகல் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலக இயக்குநரும் மதகுருவுமான வண எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் கொல்லப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து இவர் மல்லாவி நோக்கி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, மாந்தை கிழக்கு அம்பாள்குளம் பகுதியில் மல்லாவி வவுனிக்குளம் வீதியில் நண் பகல் 12.30 மணியளவில் இந்தக் கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இவரது பிக்கப் வாகனம் பழுதடைந்த நிலையில், மற்றொரு வாகனம் இதனைக் கட்டியிழுத்துச் சென்றபோதே ஆழ ஊடுருவும் படையணியினர் இவரது பிக்கப் வாகனத்தை இலக்கு வைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தனது வாகனத்தை இவரே செலுத்திச் சென்றதாகவும் கிளைமோர் தாக்குதலில் தலைப்பகுதி உட்பட உடல் முழுவதும் படுகாயமடைந்த நிலையில், அந்த இடத்திலேயே இவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வழமையாக வண. கருணாரட்ணம் அடிகளார் இந்த வீதியையே தனது போக்குவரத்துக்கு பயன்படுத்துவார். இவரது வாகனத்தை அப்பகுதி மக்கள் அனைவரும் அறிவர். வழமையாக இவரே தனது வாகனத்தை செலுத்திச் செல்வார்.
அண்மையில் வன்னியில் ஆழ ஊடுருவும் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான கி.சிவநேசனின் 45 ஆம் நாள் நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு இருப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தக் கிளைமோர் தாக்குதல் நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமை விவகாரங்களில் தீவிர அக்கறை காட்டிவந்த இவர், வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் அமைக்கப்பட்டது முதல் அதன் இயக்குநராயிருந்து வந்தார். வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மனித உரிமைச் செயற்பாட்டில் இவர் தீவிரம் காட்டி வந்தார்.
மனித உரிமை ஆர்வலராகவும் மதகுருவாகவும் செயற்பட்ட இவர், போர்நிறுத்த உடன்பாட்டையடுத்து வடமராட்சி கரவெட்டியில் தனது சொந்த இடத்தில் தங்கியிருந்தார்.
எனினும், 2006 ஆம் ஆண்டில் குடாநாட்டில் மிக மோசமான பாதுகாப்புச் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து வன்னிக்குச் சென்று மனித உரிமை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.
வடக்கு - கிழக்கில் தினமும் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை ஆதாரங்கள் மற்றும் புள்ளிவிபரங்களுடன் சர்வதேசத்தின் கவனத்திற்கு இவரேகொண்டு வந்தவரென்பதும் தெரிந்ததே.
வன்னிக்கு விஜயம் செய்த பல ராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து, வடக்கு - கிழக்கில் இடம்பெறும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் ஆட்கள் காணாமல் போதல் உட்பட அனைத்து மனித உரிமை மீறல்கள் குறித்தும் குரலெழுப்பி வந்தார்.
மேற்படி மனித உரிமை செயலகத்தின் ஸ்தாபக உறுப்பினர்களான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி.க்களான அ.சந்திரநேரு மற்றும் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதும் தெரிந்ததே.
இந்த நிலையில், வண. கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.