சாம்பியன் கிண்ணப் போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் அவுஸ்திரேலியாவை சந்திக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சாம்பியன் கிண்ணப் போட்டி வரிசையில் 2008 ஆம் ஆண்டு சாம்பியன் கிண்ணப் போட்டி செப்டெம்பர் மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
முன்னணி 8 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய அணிகள் மோதுகின்றன. 11 ஆம் திகதி இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் உலக சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்தியா இந்தப் போட்டியில் `ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. செப்டெம்பர் 11 ஆம் திகதி முதல், 28 ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 15 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்படுமென சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஜூன் மாதம் இதற்காக சர்வதேச கிரிக்கெட் சபையின் குழு பாகிஸ்தானுக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்.