ஐ.பி.எல்.தொடரில் செவாக் தலைமையிலான `டில்லி டேர்டெவில்ஸ் அணி ஷேன் வோர்னின் ராஜஸ்தான் ரோயல்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் மிகச் சுலபமாக வென்றது.
ஐ.பி.எல். ருவென்ரி -20 தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் கப்டன் வோர்ன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
தொடக்கத்திலிருந்தே `ராஜஸ்தான் ரோயல்ஸ்' வீரர்கள் படுமோசமாக ஆடினர். மெக்ராத், மக்ரூப், வெட்டோரி ஆகியோரது துல்லிய பந்துவீச்சில் திணறிப் போயினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட யூசுப் பதான் (10), ஷேன் வாட்சன் (21), முகமது கைவ் (9), லேமன் (1) விரைவாக வெளியேறி ஏமாற்றினர்.
ரவீந்திர ஜடேஜா அதிகபட்சமாக 29 ஓட்டங்கள் எடுத்தார். வோர்ன் 14 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசிக் கட்டத்தில் சாலுன்கி அதி விரைவாக 26 ஓட்டங்கள் எடுக்க `ராஜஸ்தான் ரோயல்ஸ்' அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ஓட்டங்களை மட்டும் எடுத்தது.
இலகுவான இலக்கை விரட்டிய டில்லி டேர்டெவில்ஸ் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சென்னை டெஸ்டில் 319 ஓட்டங்கள் எடுத்து நல்ல போர்மில் இருந்த கப்டன் செவாக் (12) வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.
இதற்குப் பின் காம்பிர், தவான் இணைந்து அசத்தலாக ஆடினர். இருவரும் அரைச்சதமடிக்க `டில்லி டேர்டெவில்ஸ்' அணி 15.1 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. காம்பிர் 58 (7 பவுண்டரி, 1 சிக்ஸ்), தவான் 52 ( 8 பவுண்டரி) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமலிருந்தனர்.