ஐ.பி.எல். தொடரை தோனியின் `சென்னை சுப்ப கிங்ஸ்' அணி அமர்க்களமாகத் தொடக்கியுள்ளது. மைக்கேல் ஹசியின் அதிவேக சதம் கைகொடுக்க, யுவராஜ் சிங் தலைமை யிலான `கிங்ஸ் பஞ்சாப்' அணியை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐ.பி.எல். `ருவென்ரி - 20' தொடர் நடக்கிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான `சென்னை சுப்ப கிங்ஸ்' அணி, யுவராஜ் சிங்கின் `கிங்ஸ் பஞ்சாப்' அணியை சந்தித்தது. நாணயச் சுழற்சியில் வென்ற தோனி துணிச்சலாகத் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.
ஹைடன் - பார்த்திவ் படேல் இணைந்து அதிரடித் தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரை `வேகப்புயல்' பிரட் லீ வீச, அதில் ஹைடன் பவுண்டரி விளாசும் அதிசயத்தைக் காண முடிந்தது. ஷ்ரீசாந்த் வீசிய இரண்டாவது ஓவரில் பார்த்திவ் படேல் `ஹட்ரிக்' பவுண்டரி அடித்து அசத்தினார். அடுத்த ஓவரில் பிரட் லீ `வேகத்தில்' பார்த்திவ் (15) ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த மைக்கேல் ஹசி மிகவும் விவேகமாக ஆடினார். பிரட் லீ ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்து ஆச்சரியமளித்தார். ஹைடன் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. இவர் இர்பன் பதான் பந்தில் 25 ஓட்டங்களுடன் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கப்டன் தோனி (2) ஏமாற்றினார்.
ரெய்னா வந்த வேகத்திலேயே வெளுத்து வாங்கினார். ஹோப்ஸ், பியுஸ் சாவ்லா, கோயல் வீசிய பந்துகளில் தலா ஒரு சிக்சர் விளாசினார். இவர் 32 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஓரம் (13) பெரிதாகக் சாதிக்கவில்லை. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபக்கம் அசத்தலாக ஆடினார் மைக்கேல் ஹசி.
ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட இவர் சிக்சர் மழை பொழிந்தார். இர்பன் பதான், பியுஸ் சாவ்லா, கோயல், ஹோப்ஸ், மோடா, ஷ்ரீசாந்த், பிரட் லீ ஆகியோர் பந்துகளில் சிக்சர் அடித்து மிரட்டினார். இவர் 50 பந்துகளில் அதிவேக சதம் அடித்து சாதித்தார்.
ஹோப்ஸ் வீசிய கடைசி ஓவரில் தமிழக வீரர் பத்ரிநாத் கலக்கினார். முதல் இரு பந்துகளில் அடுத்தடுத்து சிக்சர் அடித்த இவர், மூன்றாவது பந்தில் பவுண்டரி விளாசினார். 5 ஆவது பந்தில் ஹசி ஒரு சிக்சர் அடிக்க, இந்த ஓவரில் மட்டும் 25 ஓட்டங்கள் எடுக்கப்பட்டது. இறுதியில் `சென்னை சுப்ப கிங்ஸ்' அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்கள் எடுத்தது. ஹசி 116 (8 பவுண்டரி, 9 சிக்சர்), பத்ரிநாத் 31 (3 பவுண்டரி, 2 சிக்ஸ்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
கடின இலக்கை சேஸ் செய்த `கிங்ஸ் பஞ்சாப்' அணிக்கு கோயல், ஜேம்ஸ் ஹோப்ஸ் அருமையான அடித்தளம் அமைத்தனர். ஓரம் பந்துவீச்சில் ஹோப்ஸ் பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். மறுபக்கம் கோயல் `சிக்சர்' அடித்து தூள் கிளப்பினார். கோயல் 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த ஹோப்ஸ் அனாயசமாக பவுண்டரிகள் விளாசினார். இவர் 71 ஓட்டங்களுக்கு (10 பவுண்டரி, 3 சிக்ஸ்சர்) பழனி அமர்நாத் பந்தில் வீழ்ந்தார்.
அடுத்து வந்தார் கப்டன் யுவராஜ் `ருவென்ரி- 20' உலகக் கிண்ணத் தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்தவர் என்பதால் ரசிகர்கள் உற்சாகமாயினர்.இதற்கேற்ப பழனி அமர்நாத், முரளிதரன் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்து அசத்தினார். இந்த சந்தோஷம் அதிக நேரம் நீடிக்கவில்லை.
ஜோகிந்தர் சர்மா பந்தை சிக்சருக்கு தூக்க முயன்றார் யுவராஜ். பந்தை மிகவும் தாழ்வாக பழனி `கட்ச்' பிடிக்க, 23 ஓட்டங்களுக்கு நடையைக் கட்டினார். தங்களது `ஹீரோ' வெளியேறியதைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஓவர்கள் கரைந்து கொண்டிருக்க `ஓட்ட வீதம்' எகிறியது. சங்கக்கார, கடிச் இணைந்து போராடினர். இந்த நேரத்தில் முரளி சுழலில் சங்கக்கார 54 ஓட்டங்களுக்கு (5 பவுண்டரி, 2 சிக்ஸ் ) ஆட்டமிழக்க சிக்கல் ஏற்பட்டது. கடைசி 6 பந்தில் 43 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது.
ருவென்ரி - 20 உலக் கிண்ணத்தின் கடைசி ஓவரை கலக்கலாக வீசிய ஜோகிந்தர் சர்மா இம் முறையும் சாதித்தார். இறுதியில் `கிங்ஸ் பஞ்சாப் அணி' 20 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ஓட்டம் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. கடிச் (21), பதான் (3) ஆட்டமிழக்காமலிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் சென்னை சுப்ப கிங்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. ஆட்டநாயகனாக மைக்கேல் ஹசி தேர்வு செய்யப்பட்டார்.