Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Tuesday, April 22, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Editorial
போலி டாக்டர்கள்
[22 - April - 2008] [Font Size - A - A - A]
இலங்கையில் சுமார் 40 ஆயிரம் போலி டாக்டர்கள் செயற்படுவதாகவும் அவர்களை மடக்கிப் பிடிக்கும் நடவடிக்கையாக சுகாதார அமைச்சின் திடீர் சோதனைப் பிரிவு பொலிஸாருடன் சேர்ந்து தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மீது விரைவில் முற்றுகைகளை நடத்தப் போவதாகவும் கடந்தவாரம் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. டாக்டர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டு சட்ட விரோதமாக மருத்துவப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தப் போலிகளினால் நாடுபூராவும் ஆயிரக்கணக்கான நோயாளர்கள் உயிராபத்தை எதிர் நோக்கியிருப்பதாகவும் இவர்களிடம் மருத்துவத்தில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்சத் தகுதி தராதரம் கூடக் கிடையாது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்திருக்கிறது. போலி டாக்டர்களில் பெரும்பாலானவர்கள் ஓய்வு பெற்ற மருந்தகவியலாளர்களாக அல்லது நடுத்தர தொழில்நுட்ப உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள் என்றும் கடுமையாக நோய்வாயுற்றவர்கள் இவர்களிடம் சிகிச்சை பெற்ற பிறகு ஆபத்தான நிலைக்குள்ளாகி மரணமடைந்த பல சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருக்கிறார்.

சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலமாக நாட்டில் 40 ஆயிரம் போலி டாக்டர்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை நோக்கும் போது 4 வருடங்களுக்கு முன்னர் இதே பிரச்சினை குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) விடுத்திருந்த அறிக்கையொன்று நினைவுக்கு வந்தது. அன்று நாட்டில் தகைமைவாய்ந்த மேற்கத்தைய மருத்துவத்துறை டாக்டர்களுக்கும் போலி டாக்டர்களுக்கும் இடையேயான விகிதம் 1:4 ஆக இருப்பதாக மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த டாக்டர் அநுருத்த பாதெனிய அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். உண்மையான டாக்டர்களின் தொகை 10 ஆயிரமாக இருக்கின்ற அதேவேளை, போலி டாக்டர்களின் தொகை சுமார் 40 ஆயிரமாக இருக்கிறது. இது தவிர, தொழில்சார் தகைமைகள் இல்லாமல் பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மருத்துவ ஆலோசகர்கள் என்று தங்களைக் கூறிக்கொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சுகாதாரத்துறையைப் பெரும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கிறது. போலி டாக்டர்கள் மிகவும் தந்திரமான முறையில் செயற்பட்டு அரசாங்க அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவுகிறார்கள். இந்த மோசடியைத் தடுப்பதற்கு உருப்படியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரசாங்கம், குறிப்பாக சுகாதார அமைச்சு தவறிவிட்டது என்றும் டாக்டர் பாதெனிய அன்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இன்று 4 வருடங்கள் கழித்து அதே 40 ஆயிரம் போலிடாக்டர்கள் பற்றி சுகாதார அமைச்சு பேசுவதை எம்மால் காணக்கூடியதாக இருக்கிறது. போலி டாக்டர்கள் தொடர்பில் இந்த 4 வருட காலகட்டத்தில் சுகாதார அமைச்சு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கத் தவறிவிட்டது என்று இதை அர்த்தப்படுத்துவதா அல்லது அவ்வப்போது போலி டாக்டர்களை மடக்கிப்பிடிக்க அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வந்திருக்கின்ற போதிலும், தொடர்ந்தும் போலிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தப்படுத்துவதா? உண்மையிலேயே சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா இக் கேள்விக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டவர். உகந்த கண்காணிப்பு நடைமுறைகள் இல்லாததே மருத்துவத்துறையில் போலிகளின் பெருக்கத்திற்குக் காரணமாகும். இது தொடர்பில் சுகாதார அமைச்சு வேறு எந்தவிதமான சாக்குப் போக்கையும் கூற முடியாது என்பது எமது உறுதியான அபிப்பிராயமாகும்.

ஓய்வு பெற்ற அல்லது இறந்து போன தகுதி வாய்ந்த டாக்டர்களின் பெயர்களையும் தங்களுக்கு நெருக்கமான உறவினர்களாக இருக்கும் பிரபலமான மருத்துவ நிபுணர்களின் பெயர்களையும் இந்த போலி டாக்டர்கள் தங்களுக்கு அனுகூலமான முறையில் தவறாகப் பயன்படுத்துவதாக சுகாதார அமைச்சின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஏமாற்று மோசடி குறித்து ஏற்கனவே பல தடவைகள் மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் சுகாதார அமைச்சுக்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. சில போலி டாக்டர்களின் தந்தைமார் உண்மையான டாக்டர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த தந்தைமாரின் பதிவு இலக்கத்தையும் பெயர்களையும் பயன்படுத்திக் கொண்டு மகன்மாரும் மகள்மாரும் கிளினிக்குகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சிலர் மருத்துவ நிலையங்களை நடத்துவதற்கு வர்த்தக செயற்பாடுகளுக்கான பதிவு இலக்கங்களைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சில போலி டாக்டர்கள் தாங்கள் `தகைமை வாய்ந்தவர்கள்' என்று காண்பிப்பதற்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்துகிறார்கள். வேறு சிலர் எந்த விதமான ஆவணமும் இன்றியே தங்கள் காரியத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள்.

இத்தகைய முறைகேடுகளை இல்லாதொழிப்பதற்கு இலங்கை மருத்துவக் கவுன்சிலின் ஒழுங்கு விதிகள் போதுமான வலுவைக் கொண்டவையாக இல்லை என்பதையும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நீண்ட காலமாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் பிரகாரம் சகல மருத்துவர்களும் (ME DICAL PRACTITIONERS) மருத்துவ நிறுவனங்களும் வருடாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகைக் கட்டணத்தைச் செலுத்தி சுகாதார அமைச்சின் தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்கமைப்புக் கவுன்சிலில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். சகல தனியார் மருத்துவர்களும் தாங்கள் பணிபுரியும் இடங்களில் மருத்துவ கவுன்சில் பதிவையும் ஒழுங்கமைப்பு கவுன்சில் பதிவையும் பகிரங்கமாகத் தெரியும்படி காட்சிக்கு வைக்க வேண்டியதும் கட்டாயமாகும். எமது நாட்டில் மருத்துவ சேவைகள் மீது உறுதியான கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இல்லை. அல்லாவிட்டால் இந்தளவுக்கு படுமோசமாக போலி டாக்டர்கள் பெருகியிருக்க மாட்டார்கள். போலி டாக்டர்கள் தொடர்பான இந்த விவகாரத்தை சுகாதார அமைச்சு மிகவும் மெத்தனமாகவே நோக்கியிருக்கிறது. இனிமேலும் அத்தகைய மெத்தனப் போக்கைத் தொடராமல் மக்களின் உயிருடன் விளையாடும் இந்த விபரீதத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவத்துறையில் இருக்கக் கூடிய தொழில்சார் அமைப்புகளின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் பெற்று சுகாதார அமைச்சு போலி டாக்டர்களை மடக்கிப் பிடித்து சுகாதார சேவையை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே எமது வலியுறுத்தலாகும்.

Email this page Your Opinion Print this page
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com