மாலைதீவில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் உறுதியளித்ததாக, மாலைதீவின் முக்கிய எதிர்க்கட்சியான மாலைதீவு ஜனநாயகக் கட்சித் தலைவர் முகமது லத்தீப், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பொதுநலவாய நாடுகளும் தங்களது நாட்டு ஜனாதிபதித் தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க உறுதியளித்துள்ளதாக லத்தீப் தெரிவித்தார்.
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி கையூமின் பதவிக் காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு இணங்க விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கையை கையூம் ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கிறோம் என்றும் லத்தீப் தெரிவித்தார்.
50 உறுப்பினர்களைக் கொண்ட மாலைதீவு பாராளுமன்றத்தில் மாலைதீவு ஜனநாயகக் கட்சி சார்பாக 9 உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் 9 பேர் உள்ளனர். சுயேச்சை உறுப்பினர்கள் அனைவரும் சமுதாய சீர்திருத்தச் சிந்தனை கொண்டவர்கள் என்றும், அவர்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் லத்தீப் கூறினார்.