இராணுவப் பயிற்சி பெற்றுவரும் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் விமானப் படைக்குச் சொந்தமான, ஹெலிகொப்டரொன்றை திடீரென தனது காதலியின் வீட்டுத் தோட்டத்தில் தரையிறக்கியமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்து வழக்கப்படி அந்நாட்டு இராணுவத்தில் இளவரசர் வில்லியம் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். தற்போது விமானப் படையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கேட் மிடில்டன் என்ற பெண்ணை வில்லியம் தீவிரமாகக் காதலித்து வருகிறார்.
இந்த நிலையில் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிக்கொப்டர் ஒன்றை ஓட்டிச்சென்ற வில்லியம், திடீரென அந்த ஹெலிகொப்டரை காதலியின் வீட்டு தோட்டத்தில் தரை இறக்கினார். பயிற்சியின் போது ஹெலிகொப்டருடன் காதலி வீட்டுக்கு சென்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
ஆனால், வில்லியமின் செயலுக்கு இராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது. விமானப்படை பயிற்சியாளரான ஜோன் லேக் கூறுகையில்;
"போர் முனைகளுக்கு செல்லும் ஹெலிகொப்டர்களை வயல்வெளி மற்றும் தோட்டங்களில் தரையிறக்கவேண்டிய அவசியம் இருக்கும். இதற்காக சில தோட்டங்களில் அனுமதி பெற்றுள்ளோம். அந்த அடிப்படையில் முழு பாதுகாப்புடன் தான் அவர் தரை இறங்கினார்" என்று விளக்கம் அளித்துள்ளார்.