* திகாமடுல்ல புதிய எம்.பி.நௌஸாத் "கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தவொரு இனமும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது என்ற யதார்த்தத்தைப் புரிந்துதான் முஸ்லிம்களின் உணர்வுகளை உள்வாங்கிய தேசிய கட்சியான ஐ.தே.கட்சியுடன் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் குதித்துள்ளது."
இவ்வாறு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஏ.எம்.ஜெமீல் ஒழுங்கு செய்திருந்த மீனவர்களுக்கான கலந்துரையாடலில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.நௌஸாத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்;
"1988 ஆம் ஆண்டு நடைபெற்ற இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் பிரிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் சந்திக்கின்றது. அந்தத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய தேசியக் கட்சியிலோ போட்டியிட வில்லை. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் மட்டும் போட்டியிட்டு 17 ஆசனங்களை கைப்பற்றினார்கள்.
இவ்வாறு 20 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த அரசியல் பிரயாணம் இன்று முச்சந்தியில் வந்து நின்று எல்லாக் கட்சியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதுடன், போதாததற்கு சுயேட்சைக் குழுக்களும் களத்தில் இறங்கியுள்ளன.
மற்றுக் கட்சிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்கள் எந்தக் கட்சியின் மூலம் அரசியல் முகவரி பெற்றவர்கள் இதனை அவர்கள் மறந்து போய் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் உணர்ச்சி வேகமாக ஆக்கபூர்வமாக உருவாக்கப்பட்ட போராளிகள் பலர் தன்னை வளர்த்து ஆளாக்கிய கட்சிக்கு ஏதிராக இன்று மாற்றுக் கட்சிகளில் போட்டி இருக்கின்றார்கள்.
இது இனவாதம் பேசும் காலம் அல்ல. வடக்கும், கிழக்கும் இணைந்திருந்த போது இனவாதம் பேசி இருக்கலாம். பிரிந்த கிழக்கில் இனவாதம் பேச முடியாது. மற்றைய இனத்தின் ஆதரவு இல்லாமல் முஸ்லிம்கள் ஆட்சி அமைக்க முடியாது. ஆட்சி ஏறிய பின்பு அதாவது ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அமைக்கப்படும் கிழக்கு மாகாண சபையில் விட்டுக்கொடுப்புகள் செய்ய வேண்டும் என்ற மனோ நிலைக்கு தங்களை நாம் தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒரு முஸ்லிம் முதலமைச்சராக வர விரும்புவது அந்த கதிரையை அலங்கரிப்பதற்காக அல்ல. அந்த கதிரையில் இருந்து கொண்டு நமது மார்க்க வழியில் எப்படி மாற்று கருத்துள்ளவர்களை மற்றைய சமயத்தில் நம்பிக்கையுள்ளவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூறப்படுகின்றதோ அந்த வழியில் நடாத்தி முஸலிம்கள் ஆட்சி செய்யும் போது எல்லா இனங்களையும் கௌரவப்படுத்துவார்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.