* சுயேட்சை வேட்பாளர் நூறுல் ஹக் தெரிவிப்பு
"இன்று நமது நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களும் தத்தமது சமூகங்களின் விடியலுக்காக பாடுபடும் இத்தருணத்தில், முஸ்லிம் சமூகம் மட்டும் இதற்கு விதிவிலக்காக வாழ்வதினாலோ அல்லது நமது தனித்துவக் குரலை அடக்கி வாசிப்பதினாலோ, நமது நாட்டில் ஒரே தேசியம் - ஒற்றையாட்சி என்ற கொள்கை நிலைபெற்றுவிடப்போவதில்லை" என பன்னூலாசிரியர் எம்.எம்.எம். நூறுல் ஹக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் கப்பல் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அண்மையில் வேட்பாளர் யூ.கே. சறூக் தலைமையில் சாய்ந்தமருதில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, வேட்பாளரும் ஊடகவியலாளரும், பன்னூலாசிரியருமான எம்.எம்.எம். நூறுல்ஹக் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றும் போது தெரிவித்ததாவது;
"நமத நாட்டில் பிளவுகளும், பிரிவினைகளும் ஏறகனவே தொடங்கிவிட்டன. இந்நாட்டின் பிரதான சமூகங்களான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்ற மூன்று சமூகங்களின் பிரதிநிதித்துவங்கள் பாராளுமன்றில் இருக்கின்ற சூழலில்தான் இனவாத மேலீடுகள் கிளம்பி இருக்கின்றன.
இந்நிலையில் மூன்று சமூகத்தினதும் பிரதிநிதித்துவங்களின் பங்குபற்றுததோடு கிழக்கு மாகாண சபையின் ஆட்சி செயற்படத் தொடங்கினால், ஆரோக்கியமான சூழல் சமூகங்கமுளுக்கிடையில் மலர்ந்து விடும் என நாம் நம்பும் காலத்தை கடந்திருக்கின்றோம். இதில் முஸ்லிம் சமூகம் மட்டும் விதிவிலக்காக இருந்துவிடுவதினால் ஆகப் போவது ஒன்றுமில்லை.
வெறுமனே நமது பலம் ஒன்றிணைவதில்தான் தங்கி இருக்கின்றது என கூப்பாடு போடுவதில் - ஆர்ப்பரிப்பதில் எந்த விதமான அர்த்தங்களும் இல்லை. ஒரே அணியில் சேர்ந்திருப்பதற்கான பொது வேலைத் திட்டங்கள் அவசியமாகும். அவற்றினை சரியாக வகுத்துக் கொள்ளாது எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் எந்த நியதியும் இல்லை.
தேர்தல்கால கோஷங்களாக சமூகவிடுதலை, சுயநிர்ணய உரிமை, தனித்துவம், ஒன்றுபடுவோம் போன்ற சொற்கள் உச்சரிக்கப்படுகின்ற ஒன்றாக இன்றுமாறி இருக்கின்றது. இதற்கு நமது சமூக புத்தி ஜீவிகளும், கல்வியியலாளர்களும், இளைஞர்களும் என பலதரப்பினர்களும் பலியாகி, நமது சமூகத்தை இரையாக்கிக் கொண்டிருப்பது நமக்கு ஆரோக்கியமான பக்கமல்ல.
இன்று அரசியல் அதிகாரத்தை கைகளில் கொண்டிருக்கும் நமது அனைத்துத்தரப்பினர்களுக்கும் எதிரான - மாற்றுச் சிந்தனையையும், சமூக எழுச்சியையும் மையமாகக் கொண்ட ஒரு தளம் மிகவும் உறுதியாக கட்டியெழுப்பப்பட வேண்டிய தேவை நமது மக்களுக்கு மத்தியில் அவசியமாகி இருக்கின்றது. இதற்கு உடனடியாக புதிய தலைமுறைக்கு அரசியல் அதிகாரப் பரிமாற்றம்- கைமாற்றம் நிகழும் போதுதான் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டும்.
இதற்காகவே நமது மக்களுக்கு ஒரு மாற்றுத் தீர்வாகவும், புதிய தலைமுறையினர்களாகவும் நமது மக்கள் மன்றத்துக்கு வந்திருக்கின்றோம். எமது கரங்களைப் பற்றி நீங்கள் பயணிக்கத் தொடங்கினால் நமது சமூகம் வெளிச்சத்தில் வெற்றியை நோக்கிப் பயணிப்பது வெறும் கற்பனா வாதமாகி விடாது என்பதையும் உறுதியாக நீங்கள் நம்பலாம்