* நிந்தவூர் கூட்டத்தில் ஹசனலி
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் இருப்பைப் பற்றிச் சிந்தித்து அதற்கான உரிமைப் போராட்டத்தை எப்பொழுதுமே நடாத்தி வந்திருக்கிறது.
கிழக்கு மாகாணம் தமிழ்பேசும் மக்களின் தாயகம். இதைப் பேரினவாதிகளிடம் ஒப்படைப்பதையோ , ஆயுதக் குழுக்களிடம் ஒப்படைப்பதையோ நாங்கள் விரும்பவில்லை . இவ்வாறு நிந்தவூர் அட்டப்பள்ளத்தில் நடைபெற்ற ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளரும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசனலி குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்ட ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் ஹசனலி தொடர்ந்து பேசுகையில்;
எமது மண்ணின் இருப்பைப் பாதுகாப்பது முக்கியமான விடயமாகும். எமது மக்களின் இன்றைய தேவை வெறும் கட்டிடங்களோ , வீதிகளோ அல்ல. இதை ஒரு அரசசார்பற்ற நிறுவனம் கூடச் செய்யும். ஆனால், எமது முஸ்லிம் மக்களின் உரிமை என்பது எமக்கான விடுதலையாகும். இந்த விடுதலைக்கான ஒரு சந்தர்ப்பம் கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலாகும்.
இன்றைய பேரினவாத அரசாங்கம் கிழக்கில் சமாதானம் உண்டு என்று நிரூபிக்க வேடம் போடுகிறது.
பயங்கரவாதிகளிடமிருந்து கிழக்கை மீட்டுவிட்டோம் என்று பொய் சொல்லுகிறது. கிழக்கு இன்னும் இருளாகத்தான் இருக்கிறது. இருளை வெளிச்சமென்று பேரினவாதிகள் கூறுகிறார்கள். இந்தத் தேர்தல் மூலம் எமது கிழக்கு மாகாணத்துக்கான சூரியனை நாம் உருவாக்குதல் வேண்டும். தமிழ் பேசும் மக்கள் ஓர் அணியில் திரண்டு ஒன்றாக நின்று யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்.
கிழக்கு மாகாணம் நிரந்தர இருளுக்குள் மூழ்கப் போகிறதா ? அல்லது புதிய ஒரு சூரியனைப் படைக்கப் போகிறதா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். எமது விடுதலையும், எமது சுதந்திரமும் எமது வாக்குகளிலேயே தங்கியுள்ளது.
அரசாங்கத்தில் நாங்கள் இணைந்திருந்தோம். மக்களுக்காக பிரிந்து வந்தோம். மக்களுக்காக இப்பொழுது பதவிகளைத் தூக்கி வீசிவிட்டு எமது உரிமைக்கான போராட்டத் தேர்தல் களத்தில் உயிரையும் துச்சமாக மதித்துக் குதித்துள்ளோம்.
நாளைய விடியலில் மலர்ச்சியும், மகிழ்ச்சியும் ஏற்பட வேண்டுமானால் தமிழ்பேசும் மக்கள் வியூகம் அமைத்து ஐ.தே.கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்.
ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிப்பதன் மூலம் எமது உரிமைகளை வென்றெடுத்து கிழக்கை மீட்டெடுக்க முடியும் என்றார்.