அட்டன் கல்வி வலயத்தில் அதிகளவில் தமிழ்ப் பாடசாலைகள் காணப்படுகின்ற போதும் வலயக் கல்விப் பணிமனையில் உபயோகப்படுத்தப்படும் படிவங்கள் தனிச் சிங்கள மொழியிலேயே காணப்படுவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.
அட்டன் கல்வி வலயத்தில் 131 தமிழ்ப் பாடசாலைகளும் 37 சிங்களப் பாடசாலைகளும் காணப்படுகின்றன. நாட்டின் இரண்டாவது மொழியான தமிழ்மொழி அரசகரும மொழியாக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக் கல்வி வலயத்தில் பல படிவங்கள் தனிச் சிங்கள மொழியிலேயே காணப்படுகின்றன.
இங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகளில் அநேகமானோர் தமிழர்களாகவே உள்ளபோதும் தனிச் சிங்கள மொழியில் படிவங்கள் அச்சிடப்பட்டுள்ளமை புரியாதுள்ளது. இது தொடர்பாக அவர்கள் அக்கறை செலுத்தாததையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்படிவங்களை தமிழிலும் அச்சிட மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சரும் கல்வி உயர் அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்படுகிறது.