* பிரதியமைச்சர் வடிவேல் சுரேஷ்
"அரச நிவாரண உதவிகள் பெருந்தோட்டப் பகுதி மக்களை சென்றடைவதில் இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றும் பெரும் முயற்சிகளில் நான் இறங்கியுள்ளேன். அதன் ஆரம்பக் கட்டமாக பங்கீட்டு அட்டைகள் மூலம் மானிய விலையில் அரிசியைப் பெற்றுக்கொடுக்கும் விசேட திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளேன்.
இவ்வாறு, பிரதி சுகாதார அமைச்சரும் பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ், எல்ல பகுதியின் நியூபேக் தமிழ் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பங்கீட்டு அட்டை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் குறிப்பிட்டார்.
எல்ல பிரதேச செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் அரிசியைப் பெற்றுகொள்வதற்கான பங்கீட்டு அட்டைகள் வழங்கும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதி சுகாதார அமைச்சர் மேலும் கூறியதாவது;
"பதுளை மாவட்ட தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களின் மத்தியிலேயே 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தனர். அதன் பயனாக பாராளுமன்றம் சென்ற நான், பொறுப்பு வாய்ந்ததோர் பிரதி சுகாதார அமைச்சர் பதவியை வகித்து வருகிறேன். நான் அரசுடன் இணைந்தபோது என்னை விமர்சித்த பலர், மூன்று மாதங்களில் பெருந்தோட்டத்துறை மக்களின் பிரதிநிதிகள் என்று கூறப்படுவோர் அனைவருமே அரசுடன் இணைந்து அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இணைந்துள்ளனர். இதுதான் யதார்த்தம்.
நான் இவ்வரசின் பிரதி சுகாதார அமைச்சராக இருந்த போதிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரைப் போன்றே செயற்பட்டு வருகின்றேன்.
அத்துடன் ஏனையவர்கள் போன்று பின் கதவு வழியாகச் சென்று நான் அரசுடன் இணையவில்லையென்பதையும் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எனக்குப் பின்னால் அரசுடன் இணைந்து கொண்டவர்களும் சுதந்திரமாக இயங்க முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றனர். "ரிமோட் கொன்றோல்" ஒன்றினை இயங்குபவர் ஒருவராகவும் அதற்கமைய செயல்படுபவர்கள் ஏனையோராகவுமே இருந்து வருகின்றனர்.
பதுளை மாவட்ட தமிழ் மக்கள் என் மீது வைத்திருக்கும் பெரும் நம்பிக்கைக்கு என்றுமே மாசு ஏற்படாது. அம்மக்களுக்கு என்றுமே நான் பாதுகாவலனாக இருப்பதுடன் அவர்களுக்காக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுப்பவனுமாகவும் இருந்து வருகின்றேன்.
நான் பாராளுமன்றம் சென்ற இக்குறுகிய காலத்திற்குள் பதுளை மாவட்ட பெருந்தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் 459 பேருக்கு அரச தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். அத்துடன் பெருந்தோட்டங்களின் 175 கிலோ மீற்றருக்கான பாதைகளை சீரமைத்திருக்கின்றேன். சீமெந்திலான கொங்கிறீட் பாதைகளை தோட்டப்பகுதிகளில் பரவலாக அமைத்திருக்கின்றேன்.
பதுளை மாவட்டத்தின் ஏழு பெருந்தோட்டங்களைத் தவிர்த்து பெரும்பாலான பெருந்தோட்டங்களுக்கு மின் இணைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. பெருந்தோட்டப் பாடசாலைகள் பலவற்றிற்கு கணினித் தொகுதிகளை வழங்கியுள்ளேன். 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கூரைத் தகடுகளை தோட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்துள்ளேன்.
நாட்டின் ஜனாதிபதியையே பதுளைக்கு வரவழைத்து தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 30 ரூபா என்ற ரீதியில் தினச் சம்பள அதிகரிப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதோடு, மானிய விலையில் அரிசியைப் பெற்றுக் கொடுக்கும் இவ்வேலைத்திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.
இதுவரையில் அரசின் நிவாரண உதவிகள் அனைத்துமே கிராமப்பகுதிகள் மற்றும் பெரும்பான்மையின மக்களுக்கென்றே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்நிலையினை என்னால் மாற்ற முடிந்திருக்கின்றது. அரசின் நிவாரண உதவிகள் பெருந்தோட்டத்துறை மக்களுக்கும் கிடைக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்கள், கிராம சேவை அதிகாரிகள் முன்னின்று அமுல்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்நாட்டின் பெரும்பான்மையின மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் சலுகைகளும் வாய்ப்புக்களும் பெருந்தோட்டத்துறை மக்களிடமும் சென்றடைய வேண்டும். இது விடயத்தில் எம்மவர்கள் எவ்வகையிலும் புறக்கணிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட என்னால் அனுமதிக்க முடியாது" என்றார்.
மற்றும், நியூபேக் தமிழ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.இராசமாணிக்கம், சொரணாதோட்ட பிரதேச சபை உறுப்பினர் எஸ்.சந்திரசேகரன், பகுதி கிராம சேவை அதிகாரி, நியூபேக் தோட்ட முகாமையாளர், பிரதி சுகாதார அமைச்சரின் பொதுஜன தொடர்பு அதிகாரி வி.தினேஷ் ஆகியோரும் உரையாற்றினர்.