இரத்தினபுரி மாவட்டத்தின் தமிழ், முஸ்லிம் பாடசாலைகளில் பாரிய தளபாடத் தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வருடா வருடம் பாடசாலைகளில் அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் அதிகளவில் நிர்மாணிக்கப்பட்டாலும் இப்பாடசாலைகளில் நிலவும் தளபாடத் தட்டுப்பாடுகளால் பாடசாலை நிர்வாகங்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக இப்பாடசாலைகளுக்கு தளபாடம் எதுவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சில விசேட செயற்றிட்டங்களின் அடிப்படையில் இரண்டொரு பாடசாலைகளுக்கு தளபாட வசதிகள் கிடைத்தாலும் 90 சதவீதமான தமிழ்மொழிப் பாடசாலைகள் தளபாடப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தூர கஷ்டப் பிரதேச பாடசாலைகளில் மட்டுமன்றி, நகர்ப்புறத்தை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதால் நகர்ப்புறப் பாடசாலைகள் குறிப்பாக தமிழ்ப் பாடசாலைகளில் இந்நிலைமையை மிகவும் பாரதூரமானதாக அவதானிக்கலாம்.
சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் கூட மாணவர்களின் சிறிய கதிரைகளில் அமர்ந்து கற்பிப்பதாகவும் ஆசிரியர் மேசைகள் கூட இல்லாமலிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.