மலையகத்தில் முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் 70 வீதத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளதாக பிரிடோ அமைப்பின் லிந்துலை பகுதி பிரதேச இணைப்பாளர் எஸ்.சிவராஜா தெரிவித்தார்.
முன்பள்ளி மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேலும் அவர் கூறியதாவது;
அண்மைக்காலம் வரை மலையக சிறார்களின் முன்னேற்றம் குறித்து கருத்து வெளியிடுவதற்குக் கூட எவரும் முன்வராத நிலையே காணப்படுகின்றது. இதனால், பெருந்தோட்டப் பகுதி சிறுவர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து ஆராயப்படும் போதெல்லாம் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக்கூடிய வகையில் எவரும் பிரச்சினைகளைச் சரியாக வெளிப்படுத்த முன்வருவதில்லை.
இதன் பின்னணியிலேயே பிரிடோ நிறுவனம் முன்பள்ளிக் கல்வியின் அவசியத்தை மலையக மக்கள் மத்தியில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.
இன்று ஒவ்வொரு தோட்டத்திலும் பெற்றோர்களால் ஏற்படுத்தப்பட்ட முன்பள்ளி அபிவிருத்தி சபைகளால் 150 க்கும் மேற்பட்ட முன்பள்ளிகள் சிறப்பாக தொடர்ந்தும் இயங்கி வருவது எமக்குக் கிடைத்துள்ள பெரு வெற்றியாகும்.
தமது முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தாங்களே கொடுப்பனவை வழங்கி முன்பள்ளிகளை நடத்தும் அளவிற்கு பெற்றோர்களின் தன்னம்பிக்கை வளர்ந்திருக்கிறது.
இந்த வளர்ச்சியின் அடுத்தகட்டமாக தமது பிள்ளைகளுக்கான சீருடைகளை வழங்க பெற்றோர்கள் முன்வந்திருப்பது ஆரோக்கியமான வளர்ச்சியின் வெளிப்பாடாகும்.
நேர்த்தியான சீருடைகள் பிள்ளைகளுக்கு மதிப்பையும் கௌரவத்தையும் அளிக்கின்ற அதேவேளை ஏனைய சமூகங்களின் பிள்ளைகளுக்கு சமமாக தம் பிள்ளைகளும் வளர்வது பற்றிய திருப்தியுணர்வும் ஆர்வமும் பெற்றோர் மத்தியில் அதிகரித்துள்ளது.
பிரிடோ நிறுவனம் நடத்தும் அனைத்து முன்பள்ளிகளிலும் பிள்ளைகள் இன்று சீருடைகளுடன் சமூகமளிப்பது பாரிய சமூகமாற்றத்தின் ஒரு அடையாளமாகும்.
இவ்வாறான முன்னேற்றம் நம் நாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்டங்களிலும் ஏற்பட வேண்டுமென்பதே எமது நிறுவனத்தின் அபிலாசையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.