* முன்னாள் அமைச்சர் நந்திமித்திர ஏக்கநாயக்க கூறுகிறார்
பொதுஜன ஐக்கிய முன்னணியில் நான் மீண்டும் இணையப் போவதாக பரப்பப்பட்டுவரும் வதந்திகளில் எந்த வித உண்மையும் இல்லை, நான் தொடர்ந்தும் ஜ.தே.க. மூலமே எனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேனெ முன்னாள் பொ.ஐ.மு. அமைச்சரும் தற்போதைய ஐ.தே.க. மத்திய மாகாணசபை உறுப்பினருமான நந்திமித்திர ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அண்மையில் ரத்தோட்டை நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. யாலெகமவின் உருவச்சிலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசும் போது கூறியதாவது;
"நான் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னனி அமைச்சில் அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்ததுடன் இறுதியாக மத்திய மாகாண முதலமைச்சராகவும் இருந்தேன்
இக்காலப்பகுதிகளில் இன, மத, மொழி, அரசியல் பேதமின்றி மாத்தளை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்து அனைத்து இன மக்களினதும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொடுத்தேன். இதன் காரணமாக அனைத்து இன மக்களும் என்மீது மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளனர். நான் அரசியலில் மீண்டும் உயர்நிலையை அடையவேண்டுமென இவர்கள் விரும்புகின்றனர். பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் மாத்தளை மாவட்ட மக்கள் அனைவருமே எனக்கு வாக்களித்து என்னை பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற செய்வார்கள் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
எனவே எனது வெற்றிவாய்ப்பை தடுக்கும் பொருட்டு எனது வளர்ச்சியை சகித்துகொள்ளமுடியாத ஒருசிலரே நான் பொ.ஐ.மு.வில் மீண்டும் இணையப் போவதாக வதந்திகளை பரப்பி வருகின்றனர். நான் எக்காரணத்தை முன்னிட்டும் பொ.ஐ.மு.வில் மீண்டும் இணைய போவதில்லை
நான் பொ.ஐ.மு. அரசில் நீண்ட காலமாக பதவிவகித்ததால் தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உட்பட தற்போதைய அமைச்சர் பலரிடமும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். இந்த நட்பின் காரணமாக அவர்களில் ஒருசிலர் தற்போதும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரிப்பார்கள். இந்த உரையாடல்கள் அனைத்தும் எமது நட்பை அடிப்படையாக கொண்டதே தவிர அரசியல் உரையாடல் அல்ல. இருப்பினும் அவர்களில் ஒருசிலர் என்னை மீண்டும் பொ.ஐ.மு. யில் இணையுமாறு வற்புறுத்தி வருவது உண்மையே.
இருந்தபோதும் பொ.ஐ.மு.வில் மீண்டும் இணையும் நோக்கம் எனக்கில்லை அமரர் எஸ்.டி. யாலகம என் நெருங்கிய நண்பர். அவரது உருவசிலைக்கு அடிக்கல் நாட்டி வைக்க கிடைத்த சந்தர்ப்பத்தை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன்" என்றார்.