* யாழ். உதவி திட்டமிடல் பணிப்பாளர் மகேஸ்வரன்
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தத்தால் தொழிலை இழந்தோருக்கான வாழ்வாதார உதவிகள் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட போதும் சமுர்த்தி நிறுவனம் தனது நிவாரண உதவிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாணம் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் க. மகேஸ்வரன் தெரித்தார்.
யாழ். நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி சங்கம் ஏற்பாடு செய்திருந்த சித்திரை புத்தாண்டுக்கான விளையாட்டு விழாவில், பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விழா யாழ்ப்பாணப் பிரதேச செயலக வளாகத்தில் யாழ்.நகர் கிழக்கு சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி அலெக்ஸி பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
அங்கு மகேஸ்வரன் தொடர்ந்து உரையாற்றுகையில்;
சமுர்த்தி அதிகார சபை நாடு முழுவதும் முன்னூறு சித்திரைப்புதுவருட விளையாட்டு விழாவை நடாத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இது மூவாயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றைந்து அபிவிருத்திக் கிராமங்களை உள்ளடக்கியதாக நடைபெறவேண்டுமெனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில் யாழ்ப்பாணம் நகர் கிழக்கு சமுர்த்திச் சங்கம் தனது கட்டுப்பாட்டிலுள்ள மூன்று கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கான புத்தாண்டு விளையாட்டு விழா வினை காலையில் யாழ்ப்பாண செயலக வளாகத்திலும் மாலையில் நவாந்துறையிலும் நடாத்தியது.
இங்குள்ள சிலர் சமுர்த்தி எதைச் சாதித்துள்ளது என கேள்வி எழுப்பவது தவிர்க்க முடியாது. சமுர்த்தி நிவாரணம், வாழ்வாதாரங்களை இழந்து வறுமைக்கோட்டுக்கு தள்ளப்பட்டவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்திவருகின்றது . வாழும் காலத்தில் சிறுகச் சிறுக சேமித்து அவர்கள் வாழலாமென்ற பணபலநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏதோ ஒரு தொழிலில் வருமானத்தை ஈட்ட வங்கிக்கடனை வழங்கி அதன் மூலம் தொழில் முயற்சிகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
எந்தத் திட்டங்களிலும் இல்லாத அளவுக்கு சிறப்பாக சமுர்த்திக்கு குடும்பங்களது குழந்தைகளின் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கல்வி ஊக்குவிப்புக்கு நிதிவழங்கி உதவுகின்றது.
இன்று சமுர்த்திப் பயளாளிகளின் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த விளையாட்டு விழாவை நடாத்தி அவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கி வருகின்றது. இத்தனை செயற்திட்டங்கள் மூலம் சமுர்த்தி உதவி பெறுவோர் பயனடைந்து வருகின்றனர் என்றார்.
விளையாட்டு விழாவில் ஆசியுரையை யாழ்.புனித மரியன்னை பேராலய உதவிப் பங்குத்தந்தை அருட்பணி பாலதாஸ் பிறாயன் வழங்கினார்.
விளையாட்டு விழாவாக இசைசங்கமத்தில் பங்குப் பரிமாற்றம் பெண்களுக்குகான சங்கீதக் கதிரை, சிறுவர்களுக்கான வினோத உடைப் போட்டி, ஆண்,பெண் பலம் பார்த்தல் போட்டிகள் இடம்பெற்றன.
வெற்றியாளர்களுக்கான பரிசில்களை பிரதமவிருந்தினர் மற்றும் ஊடகவியலாளர் ஐயா சச்சிதானந்தம், சமூர்த்திப் பணியாளர்கள் வழங்கினர்.