2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி யாழ். குடாநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளினால் அல்லைப்பிட்டிப் பகுதியிலிருந்து வெளியேறிய 350 குடும்பங்களில் ஒரு தொகுதி மக்கள் நேற்று திங்கட்கிழமை மீளக் குடியமர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்த நாளிலிருந்து பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கிய இந்த மக்கள் தங்களைச் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்துமாறு தொடர்ச்சியாக அரசாங்க அதிபருக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கமையவே இம் மக்களின் மீள் குடியேற்றம் அமைந்திருக்கிறது.
யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை யுத்தம் இல்லாத நிலையில் பாதுகாப்பு நடைமுறைகளென்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாகவே உள்ளதென்று இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். கஞ்சியைக் குடித்தாலும் பனம்பழத்தைச் சுட்டுச் சாப்பிட்டாலும் சொந்த இடத்தில் இருப்பதைப் போல் வராதென்று கூறுகின்றனர்.
நாவாந்துறை சென். நிக்கிலஸ் தேவாலயத்திலிருந்து 50 குடும்பங்களும் யாழ்ப்பாணம் ஓ.எல்.ஆர். தேவாலயத்திலிருந்த 5 குடும்பங்களும் மற்றும் உறவினர் வீடுகளிலிருந்த 10 குடும்பங்களுமாக 65 குடும்பங்கள் நேற்று மீளக் குடியமர்த்தப்பட்டன.
நேற்றுக் காலை முதல் மிக பரபரப்பாகக் காணப்பட்ட இந்த மக்கள் காலை 8 மணியளவில் அரச செயலகத்தால் அனுப்பப்பட்ட லொறிகளில் தமது உடைமைகளை ஏற்றியதோடு தாம் தங்கியிருந்த காலத்தில் தமக்குப் பல்வேறு வழிகளிலும் உதவிகளை வழங்கிய ஊரவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
முற்பகல் 9.30 மணியளவில் சென்.நிக்கிலஸ் தேவாலயத்திற்கு வந்த யாழ். அரச அதிபர் க. கணேஷ் திட்டமிடல் பணிப்பாளர் ம.பிரதீபன் உள்ளிட்ட அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின் போது அரச அதிபர் உரையாற்றுகையில்;
" நீண்ட காலக் கஷ்டங்களின் பின்னர் நீங்கள் இன்று உங்களது சொந்த இடத்தில் குடியேறச் செல்கிறீர்கள். குடாநாட்டிலுள்ள நிறுவனங்களுடன் கலந்துரையாடி அவர்களின் ஒத்துழைப்புடன் உங்களுக்கான அடிப்படை வசதிகள் படிப்படியாக ஏற்படுத்தித் தரப்படும். உங்களுக்கான மீள் குடியமர்வுக் கொடுப்பனவோடு நிவாரணம் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அல்லைப்பிட்டிக் கடற்படை அதிகாரியுடன் கதைத்த போது அவர் உங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியுள்ளார். எஞ்சியவர்களையும் மீளக் குடியமர்த்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடைய நலனில் மாவட்டச் செயலகம் தொடர்ந்து அக்கறையுடன் இருக்கும்.
உங்கள் மீளக் குடியமர்வும், வாழ்வும் நல்லபடியாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திட்டமிடல் பணிப்பபாளர் பிரதீபன் மற்றும் அல்லைப்பிட்டி கிராம சேவையாளர் உட்பட மாவட்டச் செயலக அதிகாரிகள் மக்களை அல்லைப்பிட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
தங்களுடைய மீளக் குடியமர்வு தொடர்பாக அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஜி. அலன் கருத்துத் தெரிவிக்கையில்;
"எமது மக்களுக்கு இங்கு சரியான கஷ்டம். தொடர்ந்தும் முகாம் வாழ்க்கை வாழ முடியாது. கடந்த 20 மாதங்களாக நாங்கள் இங்கு கஷ்டப்படுகின்றோம். எங்களை எவரும் வற்புறுத்த வில்லை. எங்கள் சுய விருப்பின் பேரிலேயே எங்களுடைய இடங்களுக்குச் செல்கின்றோம்.
எமது சேதமடைந்த வீடுகளைத் திருத்துவதோடு வீடு இல்லாதவர்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துத் தருவதற்கு வேர்ல்ட் விஷன் (உலக தரிசனம்) நிறுவனம் முன் வந்துள்ளது. சோ- ஆ நிறுவனம் கிணறுகளையும் மலசல கூடங்களையும் சுத்தப்படுத்தித் தந்துள்ளது. ஹரிட்டாஸ் நிறுவனம் வலைகளை வழங்கியதால் அல்லைப்பிட்டி வடபகுதியில் நாம் தொழில் செய்யக் கூடியதாக உள்ளது. தற்போது 48 பேர் தொழில் செய்கின்றோம்.
இடம் பெயர்ந்திருக்கின்ற மேலும் 58 குடும்பங்கள் மீளக் குடியமர விருப்பம் தெரிவித்து கடிதங்களை வழங்கியுள்ளன. இது தொடர்பாக அரச அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.