* மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
சமய அறிவைப் பெறும், ஒரு சமூகம் குற்றச் செயல்களிலிருந்து விடுபட்டு சீரும் சிறப்புமாக மிளிரும். இதற்காகத்தான் நாம் பிள்ளைகளை ஞாயிறு பாடசாலைக்கு அனுப்பி சமயக் கல்வியை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம் என்று மாத்தறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பீ.பி.ஜி. ஆயுபால தெரிவித்தார்.
மாத்தறை நாவிமன விகாரை ஞாயிறு பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழாவில் விசேட அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றும் போது;
"அடுத்த வீட்டுப் பிள்ளைகள் ஞாயிறு பாடசாலைக்குச் செல்லாது ரியூஷன் வகுப்புக்குச் செல்கிறார்களே என்று தமது பிள்ளைகளையும் ரியூஷன் வகுப்புக்களுக்கு அனுப்புவது இன்று நாகரிகமாக அமைந்துள்ளது.
பாடசாலை சென்று ஆயிரம் பட்டங்களைப் பெற்றாலும் பிரயோசனமில்லை. சமய, ஒழுக்கக் கல்வி இல்லாது போனால் ஞாயிற்றுக்கிழமைகளில் ரியூஷனுக்குப் போவதாக பெற்றோர்களுக்கு `டிமிக்கி' கொடுத்துவிட்டுச் செல்லும் பெண் பிள்ளைகள் சுற்றுலா விடுதிகளில் தங்களது காதலர் கற்பிக்கும் காதல் பாடங்களைக் கற்கும் போது பொலிஸார் பாய்ந்து பிடித்துச் செல்வதை எல்லோருமே காண்கிறோம்.
இன்று சமய அறிவும், ஒழுக்க நெறியும் அற்றுப் போயுள்ளதே குற்றங்கள் பெருக முக்கிய காரணங்களாகும்.
எனவே சமூகம் சீரும் சிறப்பும் பெற்று மிளிர வேண்டுமானால் சிறுவயதிலிருந்தே பிள்ளைகளுக்கு சமய நெறிகளின் கருத்துகளை அடிப்படை அறிவாக ஊட்ட வேண்டும்" என்றார்.