* கனடாவின் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அரசிடம் கோரிக்கை
: இலங்கையில் மனித உரிமைகள் மோசமடைந்து வருவதற்கு பதிலளிக்குமாற்போன்று அந்நாட்டின் மீது கனடா தடைகளை விதிக்கவேண்டும் என்று அந்நாட்டின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதிதிரட்டல் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது ஒன்ராறியோவிலுள்ள சட்டத்தரணிகள் குழு மற்றும் இலங்கை வம்சாவளியினரான கனடியர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய நாடான இலங்கையில் சட்டம் சீர்குலைந்திருப்பதாகவும் அரசின் ஆதரவுடனான கொலைகளும் கடத்தல்களும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மீது பொருளாதார இராஜரீக தடைகளை அமுல்படுத்துவது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலிக்க வேண்டுமெனவும் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு நிபந்தனையாக வெளிநாட்டு உதவிப்பங்களிப்புகளை இதனுடன் தொடர்புபடுத்த வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
மோதல்கள் இடம்பெறும் உறுப்பு நாடுகளில் சமாதானத் தீர்வை கொண்டு வருவதற்கு பொதுநலவாயத்தில் கனடா வரலாற்று ரீதியாகவே தலைமை தாங்குவதாக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த சக் கொன்கெப் கூறியுள்ளார். இலங்கையில் வன்முறைகளையும் மக்களின் துன்பங்களையும் தீர்த்து வைப்பதற்கு இதுவே தருணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் மோதல்கள் கனடாவிலும் எதிரொலிகளை ஏற்படுத்துகின்றது. ஏனெனில், பெருந்தொகையான தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றனர். பலர் யுத்த அகதிகளாகும்.
தமது போராட்டத்துக்கு கனடாவை புலிகள் தளமாகப் பயன்படுத்துவதாக கனடியப் பொலிஸார் புலனாய்வுத்துறையினரும் நம்புகின்றனர்.
2006 இல் பதவிக்கு வந்த கன்சர்வேட்டிவ் கட்சி புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினர். பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் புலிகளையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். ஆனால் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக கனடா அதிகளவு முயற்சிகளை எடுக்கவில்லை என்று அங்குள்ள கனடியத் தமிழர்கள் முறைப்பாடு தெரிவிக்கின்றனர். நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அரச படைகள் இருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.
சட்ட விதிகளை இலங்கை இல்லாதொழித்து விட்டதாக கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதிதிரட்டல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் எதிரணி அரசியல் வாதிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட யுத்த நிறுத்தத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இருதரப்பையும் கனடிய அரசாங்கம் தூண்ட வேண்டுமெனவும் மோதலைக் கண்காணிக்க ஐ.நா.தூதுவரை நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவளிக்குமாறும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.