உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களாகக் கடமையாற்றுவோரின் கொடுப்பனவை அதிரிக்குமாறு சப்ரகமுவ மாகாண சபையின் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
சப்ரகமுவ மாகாண சபையின் கடந்த கூட்டத் தொடர்சபைத் தலைவர் அதுலகுமார ராகுபெத்த தலைமையில் நடைபெற்ற போது ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.
கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிரிபால கிரியெல்ல கூறும் போது;
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவருக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இது இவர்களின் பதவிக்கு கௌரவக் குறைவை ஏற்படுத்துகிறது. எனவே, இவர்களின் கொடுப்பனவை அதிரிப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. மக்களுக்கு மிக சமீபமாகக் கடமையாற்றி எமது பணிகளுக்கும் உதவி செய்கின்றனர். தற்போதைய நிலையில் இவர்கள் மிகவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர் என்றார்.
மாகாண அமைச்சர் மொகான் எல்லாவல கூறுகையில்;
இது மிகவும் அத்தியாவசியமான யோசனையாகும். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குப் போன்று மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சி அமைப்பாளர்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.
மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.டி.இராஜன் கூறுகையில்;
உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு மிகவும் குறைவாக இருக்கிறது. பொது மக்களின் சேவைகளுக்காக பரந்துபட்ட பிரதேசங்களில் அலைந்து திரிய வேண்டியுள்ளது. மாகாண சபை உறுப்பினர்களின் சலுகைகளில் சரிபாதி இவர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்றார்.
மாகாண சபை உறுப்பினர் யெஹியா எம்.இப்லார் கூறுகையில்;
ஜனாதிபதி முதல் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் வரையும் பதவி நிலைப் பொறுப்புகள் உள்ளன. 1999 இல் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு கொடுப்பனவு 1000 ரூபாவாக இருந்தது. தற்போது 5000 ரூபாவாக இருக்கிறது. இவர்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்ற இத் தீர்மானம் ஜனாதிபதிக்கும் உரிய அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.