* ஜனாதிபதி ஆலோசகர் அஸ்வர்
கடந்த 16 வருடங்களாக வழங்கப்படாதிருந்த மௌலவி ஆசிரியர் நியமனங்களை உடனடியாக வழங்க ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சர் மேற்கொண்டுள்ளார்.அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு இந்நியமனங்கள் குறித்து நெடுங்காலமாக முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளது. இந்நியமனத்தின் மூலம் உலமாக்களுக்கு கௌரவத்தை வழங்கியுள்ள ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் ஊடக ஆலாட்சி அதிகாரியுமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள கிழக்குமாகாண சபைத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் போட்டியிடும் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பிரசாரக் கூட்டங்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுவருகின்றன. தோப்பூர், கிண்ணியா, மூதூர், புடவைக்கட்டு, புல்மோட்டை,நிலாவெளி போன்ற பிரதேசங்களில் உலமாக்கள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் எனப் பல்வேறுபட்ட தரப்பினர்களையும் குழுக்களாகச் சந்தித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இக்கலந்துரையாடல்களில் மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.
இக்கலந்துரையாடல்களின்போதே அஸ்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது;
கிழக்கு மாகாணத்தின் எழுச்சி பற்றி ஜனாதிபதி, தான் ஜனாதிபதி ஆவதற்கு முன்பே தீர்க்கமான முடிவுகளைக் கொண்டிருந்தார். அதனை மகிந்த சிந்தனைப் பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று கிண்ணியாப் பாலம் துரிதமாகக் கட்டப்படுகிறது. அதேபோன்று குச்சவெளி, கங்கை, புல்மோட்டைப் பாலங்களும் நிர்மாணிக்கப்படுகின்றன. ஜனாதிபதி இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை தேர்தல்களை முன்னிட்டு முன்வைக்கவில்லை. கிழக்கு மாகாண மக்களுக்கு இத்திட்டங்கள் அன்றே மகிந்த சிந்தனையில் உள்ளடக்கப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் வாழும் மக்கள் இன்று தீர்க்கமாக முடிவுசெய்துவிட்டனர். இம்மக்களின் சமாதானத் தூதுவராகவும் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் இடையில் இணைப்புப் பாலமாகவும் அப்துல் கரீம் மௌலவி செயற்பட்டுவருகின்றார் என்பதை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
வெறும் வாய்பேச்சுகளாலும், சுலோகங்களாலும் மக்களின் பிரச்சினைகளுக்கத் தீர்வு கண்டுவிட முடியாது. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி மாகாண அரசையும் ஆளும்போது முழுமையான அபிவிருத்தியையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும்.
எனவே இன்று திருகோணமலை மாவட்டத்தில் படித்தவர்களும், உலமாக்களும், இளைஞர்களும், தொழிலாளர்களும், விவசாயிகளும் நாட்டில் ஆட்சியிலுள்ள ஐ.ம.சு.முன்னணியை வெற்றிபெற வைப்பதற்குத் தீர்மானித்துவிட்டார்கள். அதனை அவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி நிரூபித்துக் காட்டுவார்கள் எனவும் அஸ்வர் மேலும் குறிப்பிட்டார்.