ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளர் பதவி, பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவி ஆகியவற்றுக்குக் கட்சியின் ஐந்தாவது தேசிய மாநாட்டின் போதே புதியவர்கள் நியமிக்கப்படவிருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே இந்த இரண்டு பதவிகளையும் வகித்து வந்தார். கட்சிக்குள் ஏற்பட்டிருக்கும் முரண்பாடு காரணமாக விமல் வீரவன்ஸ அவ்விரு பதவிகளிலுமிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த இரண்டு வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு கட்சி எந்தவிதமான உடனடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்சியின் 5 ஆவது தேசிய மாநாடு நடைபெறவிருப்பதால் அந்த மாநாட்டிலேயே இப்பதவிகளுக்குப் புதியவர்கள் நியமிக்கப்படவிருப்பதாக ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜே.வி.பி.யும் போட்டியிடுவதால் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் வார இறுதியில் நடைபெறும் தேசிய மாநாட்டில் இந்த நியமனங்களை வழங்குவது குறித்து கட்சியின் மத்திய குழு ஆராய்ந்து வருகிறது.
இம்முறை இரண்டு பதவிகளையும் இருவரிடம் ஒப்படைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு பதவிகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்கா, பிமல் ரத்நாயக்கா, சுனில் ஹந்துநெத்தி, விஜித்த ஹேரத், சந்திரசேன விஜேசிங்க ஆகிய ஐவரதும் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரம் தெரிவித்தது.
இவ்வாரம் கூடும் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் இறுதி முடிவு ஞாயிற்றுக்கிழமை கூடும் கட்சியின் தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படவிருப்பதாக கட்சி வட்டாரம் தெரிவித்தது.