* அகில இலங்கை கமநல சம்மேளனம் கேள்வி
எம்.ஏ.எம்.நிலாம்
அரிசிக்கு ஒரே இரவுக்குள் உத்தரவாத விலையை பிரகடனப்படுத்திய அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு அதிகூடிய உத்தரவாத விலையை அறிவிக்கத்தவறியது ஏன் என்று அகில இலங்கை கமநல சம்மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.
20 ரூபாவுக்கும் 22 ரூபாவுக்கும் இடைப்பட்ட விதத்தில் நெல்லுக்கு உத்தரவாத விலையாக அறிவித்து அதே அடிப்படையில் அன்றே அரிசியின் விலையையும் உத்தரவாத விலையாக பிரகடனப்படுத்தி இருந்தால் தற்போதைய நிலைமை உருவாகியிருக்க முடியாது எனவும் கமநல சம்மேளனம் அறிவித்துள்ளது.
சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.கே.சுபசிங்க அரிசிக்கான உத்தரவாத விலைப் பிரகடனம் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"அரசாங்கம் கடந்த 16 ஆம் திகதி நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலையை பிரகடனப்படுத்தியது. இதன் பிரகாரம் வெள்ளைப் பச்சை அரிசியின் விலையை 50 ரூபாவாக பிரகடனப்படுத்தியிருப்பதோடு ஏனைய அரிசிகளின் விலைகளை 71 ரூபாவுக்கு உட்பட்ட விதத்தில் கட்டுப்படுத்தியுள்ளது.
அரிசி விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உத்தரவாத விலையைப் பிரகடனப்படுத்தும் அரசாங்கத்தின் இந்த முயற்சியானது தலைகீழாக நின்றுகொண்டு பிரச்சினைக்கு ஒட்டுப்போடுவதாகவே காணமுடிகிறது.
உண்மையிலேயே அரிசி உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு, கட்டுப்பாடு என்பவற்றுக்கான மூலகாரணம் உணவுப் பொருட்களை போதுமானளவுக்கு கையிருப்பில் வைத்திருக்கும் நிலையானதொரு கொள்கைத் திட்டம் அரசிடம் காணப்படவில்லை என்பதேயாகும்.
2007 - 2008 ஆம் ஆண்டுகளுக்கான பெரும் போகத்தின்போது உள்நாட்டில் 21 இலட்சம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தளவு பெருந்தொகை நெல் உற்பத்தியானபோதிலும் இவற்றில் ஒருகிலோ நெல்லைக்கூட அரசாங்கம் கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள் தாராளமாக நெல்லை தம்வசப்படுத்திக் கொள்வதற்காக நெல்லுக்கான உத்தரவாதவிலையை ஆகக்குறைந்தது 20 ரூபா முதல் 22 ரூபாவுக்கு இடைப்பட்ட விதத்தில் மட்டுப்படுத்தியுள்ளது. இதன் பிரதிபலன் அனைத்து நெல்லும் தனியார்துறையினரிடம் போய்ச்சேர்ந்துவிட்டன.
அரிசியின் விலையை உத்தரவாதப்படுத்த வேண்டுமென அரசாங்கம் உண்மையிலேயே விரும்பியிருந்தால் முதலில் செய்யவேண்டிய பணி நெல்லுக்கான ஆகக்கூடிய உத்தரவாத விலையை உறுதிப்படுத்தி கூடுதலான நெல்லை அரசாங்கம் கொள்வனவு செய்து கையிருப்பில் வைத்திருப்பதேயாகும்.
நெல்லை கொள்வனவு செய்தல் களஞ்சியப்படுத்தல், அரிசியாகக் குற்றுதல், சந்தைப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை. நெல், அரிசி போன்றவை தொடர்பில் அரசிடம் சீரான முகாமைத்துவமோ, கொள்வனவுத் திட்டமோ இன்றுவரை காணப்படவில்லை.
அரசாங்கம் திடீர் நடவடிக்கையாக அரிசிக்கு உத்தரவாத விலையை பிரகடனப்படுத்தியதன் காரணமாக நெல் ஆலை உரிமையாளர்கள் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யும் நெல்லுக்கான விலையை குறைக்கத் தீர்மானித்துள்ளனர். அரசு நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னமும் 20 முதல் 22 ரூபாவுக்குள் வைத்திருப்பதால் தனியார்துறையினர் அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பேற்பட்டுள்ளது. மீண்டுமொருதடவை விவசாயிகள் பெரும் கஷ்டத்தையம், இழப்பையும் எதிர்கொள்ளக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
அரிசிக்கான உத்தரவாதவிலைக்கு சமாந்தரமாக அரசாங்கம் நெல்லின் உத்தரவாத விலையையும் வர்த்தமானி மூலம் பிரகடனப்படுத்த வேண்டும். அது விவசாயிகளை பாதிக்காதவிதத்தில் காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றோம்".