இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்தும் பரீட்சைகளில் மோசடிகளில் ஈடுபடுவோருக்கான தண்டனையை இரட்டிப்பாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அனுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த மோசடிகளுக்காக தற்போது விதிக்கப்படும் 5 வருடகாலத் தடையை 10 வருடமாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தடைச் சட்டம் எதிர்வரும் க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் புதிய மாற்றத்திற்கமைய பரீட்சையின்போது பார்த்தெழுதுதல், ஆள் மாறாட்டம் செய்தல், போலி அடையாள அட்டைகளைச் சமர்ப்பித்தல் போன்ற மோசடிகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் பரீட்சைத் திணைக்களத்தால் நடாத்தப்படும் எந்த ஒரு பரீட்சைக்கும் எதிர்காலத்தில் தோற்ற முடியாத வண்ணம் 10 வருட காலத்தடை விதிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.