கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் சேவை புரியும் 300 க்கும் அதிகமான ஆசிரியர்கள் அப்பிரதேசங்களுக்கு சேவையாற்ற செல்ல முடியாதென வட மாகாண கல்வியமைச்சுக்கு விண்ணப்பித்ததையடுத்து, அமைச்சு இவ்வாசிரியர்கள் முன்னர் தற்காலிகமாக சேவையாற்றிய பாடசாலைகளில் 4 மாதங்கள் கடமையாற்ற அனுமதி வழங்கியுள்ளது.
2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத விடுமுறைக்கு வந்த யாழ். மாவட்ட ஆசிரியர்கள் ஏ9 பாதை மூடப்பட்டதையடுத்து அங்கு செல்ல முடியாத நிலையில் அமைச்சின் அனுமதியுடன் யாழ். மாவட்டப் பாடசாலைகளில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட 900 ஆசிரியர்கள் கப்பல் மூலம் வெளி மாவட்டப் பாடசாலைகளில் பணியை பொறுப்பேற்ற நிலையில் 300 க்கும் அதிகமான ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலே தற்காலிகமாக சேவையாற்றி வருகின்றனர்.
இவர்கள் தற்காலிகமாக யாழ். மாவட்டப் பாடசாலைகளில் சேவையாற்றுவதால் இவர்களுக்கான மாதாந்த சம்பளம் வழங்குவதில் சிக்கல்கள் எதிர்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வட மாகாண கல்வியமைச்சின் செயலாளரின் முயற்சியினால், மார்ச் மாதம் வரை சம்பள நிலுவைகளும், மாதாந்த சம்பளமும் வழங்கப்பட்டுள்ளன.