* விரைவில் பாராளுமன்றில் சட்டமூலத் திருத்தம்
தமிழக அகதி முகாம்களில் இலங்கைப் பிரஜாவுரிமையின்றி இருப்போருக்கு அவற்றை வழங்குவதற்கான சட்டமூலத் திருத்தத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா உறுதியளித்துள்ளார்.
ஜே.வி.பி. எம்.பி.க்களான இராமலிங்கம் சந்திரசேகரன், பிமல் இரட்நாயக்கா ஆகியோர் நேற்று திங்கட்கிழமை பிரதமர் அலுவலகத்திற்கு இந்த விடயம் குறித்து அவரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
தமிழக அகதி முகாம்களிலுள்ள 80 ஆயிரம் இலங்கையரில் 28,500 பேருக்கு இலங்கைப் பிரஜாவுரிமைக்குரிய ஆவணங்கள் இன்னமும் வழங்கப்படாமலிருப்பது குறித்தும் இது தொடர்பாக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு நான்கு தடவைகள் கூடி ஆராய்ந்த போதும் இதுவரை அதற்கான சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாதிருப்பது குறித்தும் பிரதமரின் கவனத்துக்கு இந்த இரு எம்.பி.க்களும் கொண்டுவந்தனர்.
இதனையடுத்து, சட்டமூலத் திருத்தத்தை துரிதமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், அகதிகளை மீளக்குடியமர்த்துதல், திரும்பிவரும் அகதிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வரை தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குதல் போன்றவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக இராமலிங்கம் சந்திரசேகரன் எம்.பி. கூறினார்.