* ஐக்கிய கிராம அலுவலர் சங்கம் கண்டனம்
"நிராயுதபாணிகளான கிராம உத்தியோகத்தர்கள் ஒரே நேரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மனித உயிருக்குள்ள கேவலமான நிலையை எடுத்துக் காட்டுகிறது" என ஷ்ரீ லங்கா ஐக்கிய கிராம அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தமிழ்ப்பிரதேச செயலகப் பிரிவில் கிராம உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றிய நாகராசா, ஆனந்தி தம்பதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பாக விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே சங்கத்தின் உப தலைவர் து.தேவராசா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
"கிராம உத்தியோகத்தர்கள் மீதான இக்கொடூர செயலானது வீரர்கள் என தம்மை நினைக்கும் ஆயுதபாணிகளால் நடாத்தப்பட்டுள்ள கோழைத்தனமான செயலாகும். பரிதாபமான இக்கொலையை எமது சங்கம் வன்மையாகக் கண்டிப்பதுடன் கொலையாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். தொடர்ந்தும் இது போன்ற கொலைகள் இடம்பெறாது தடுத்து, நிறுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை காலம் தாமதியாது எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம்" என்றுள்ளது.