மன்னார் மற்றும் முல்லைத்தீவு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவும் நேற்றுக் காலையும் விமானப் படை ஹெலிகொப்டர்களும் விமானங்களும் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணயளவில் அடம்பனுக்கு கிழக்கே விடுதலைப் புலிகளின் மோட்டார் நிலைகள் மீது எம்.ஐ.24 ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் அன்றூ விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
மன்னாரில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபடும் படையினருக்கு ஆதரவாகவே இந்த முன் கூட்டிய தாக்குதலை எம்.ஐ.- 24 ரக ஹெலிகொப்டர்கள் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மன்னாரில் படையினரின் முன்னரங்க காவல் நிலைக்கு வடக்கே சுமார் 3-4 கி.மீற்றர் தூரத்தில் காட்டுப்பகுதியிலிருந்து மோட்டார் நிலைகள் மீதே இந்த ஹெலிகொப்டர் தாக்குதல் நடைபெற்றதாகவும் இதைத் தொடர்ந்து அப்பகுதி நோக்கிக் கடும் ஆட்லெறி ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் விங் கொமாண்டர் தெரிவித்தார்.
இதேநேரம், முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் கடற்புலிகளின் படகுகள் மீது கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அலம்பில் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கடற்கரை பகுதியில் கடற்புலிகளின் படகுகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதன் போது கனரக ஆயுதங்கள் பல பொருத்தப்பட்டிருந்த கடற்புலிகளின் அதிவேக படகுகள் இரண்டு அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம், கடற்புலிகளின் மற்றொரு அதிவேக படகு அலம்பில் கடற்பரப்பில் வைத்து நேற்றுக் காலை தாக்கி அழிக்கப்பட்டதாகவும் இந்தத் தாக்குதல்களையடுத்த அந்தப் பிரதேசத்தில் நெருப்புக் கோளங்களும் பெரும் புகை மண்டலங்களும் தோன்றியதாகவும் விங் கொமாண்டர் தெரிவித்தார்.